விலைவாசி உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக சிவன் வேடமிட்டு ஆர்வலர் பிரசாரம்; தூக்கிச் சென்றது போலீஸ்

கவுகாத்தி: அசாமில் சிவன் வேடமணிந்து அரசுக்கு எதிராக நாடகம் நடத்திய சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தை சேர்ந்த துலால் போரா என்ற சமூக ஆர்வலர், கடந்த சனிக்கிழமை தெரு நாடகம் நடத்தினார். இதில், அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டரின் விலை உயர்வு, வேலையின்மை உள்ளிட்டவை குறித்து வசனம் பேசி நடித்தார்.   மேலும், கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? என அரசிடம் கேட்கும்படி மக்களையும் தூண்டி விட்டார். இது தொடர்பாக போலீசில் அந்த மாவட்ட பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், போரா கைது செய்யப்பட்டார். அவர் கைது செயயப்படும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்னர். இதைத் தொடர்ந்து, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அவரை விடுவிக்கும்படி உத்தரவிட்டார். இது குறித்து முதல்வர் பிஸ்வாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `தற்போதைய நாட்டு நிலவரம் குறித்து தெரு நாடகம் போடுவது அவதூறானது அல்ல. சிவன் போல் வேடமணிந்து நாடகம் நடத்துவது குற்றமல்ல. அவரை விடுவியுங்கள்,’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலையானார். பார்வதி வேடமணிந்த பெண்  தப்பி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: