×

வேலை வாங்கித் தருவதாக கூறி 4 கோடி ரூபாய் மோசடி: ரயில்வே எஸ்ஆர்எம்யு சங்க தலைவர் கைது

திருவனந்தபுரம்: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றி ₹4 கோடிக்கு மேல் மோசடி செய்த திருவனந்தபுரம் ரயில்வே எஸ்ஆர்எம்யு சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேச பிள்ளை (48). வேளி ரயில் நிலையத்தில் மெக்கானிக்கல் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். அவர் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் வாங்கி உள்ளார். திருவனந்தபுரம் பாறசாலை பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ₹ 5 லட்சம் பணம் வாங்கினார்.

ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பணத்தை திருப்பித் தருமாறு முருகேச பிள்ளையிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அந்த நபர் திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே முருகேச பிள்ளை தலைமறைவானார்.

அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் வைத்து முருகேச பிள்ளையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரை ஏமாற்றி ₹4 கோடிக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது. இவர் ரயில்வேயில் எஸ்ஆர்எம்யு சங்கத்தில் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த சங்கத்திலும் பல்வேறு முறைகேடுகள் செய்ததை தொடர்ந்து இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், பல்வேறு புகார்கள் காரணமாக வேளி ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். முருகேச பிள்ளையின் மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர் மீது தம்பானூர் போலீஸ் நிலையத்தில் 10 வழக்குகளும், நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags : Railway ,SRMU ,president , Rs 4 Crore Scam: Railway SRMU Association President Arrested
× RELATED காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ரயில்வே சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்