அசாமில் தொடர் மழை எதிரொலி; ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 8 பேர் பலி: மேலும் பாதிக்கப்பட்ட 82 பேருக்கு தீவிர சிகிச்சை

கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 8 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்பது நாட்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் குறைந்தது எட்டு பேர் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் இறந்துள்ளனர்; 82 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சிறப்பு முகாம்களை அமைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் அசாமில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியாவால் ஏராளமானோர் பலியாகின்றனர். குறிப்பாக மழைக்காலம் மற்றும் வெள்ளத்தின் போது இந்த நோய் வேகமாக பரவுகிறது. மே மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் பாதிப்பு இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் அதிகரிப்பது குறித்து அசாம் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி, மாவட்ட அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். வரும் நாட்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுகாதார இயக்கம் அசாம் அரசுக்கு அறிவுறித்தி உள்ளது. கடந்தாண்டு மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் காரணமாக வடகிழக்கு மாநிலத்தில் குறைந்தது 40 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: