×

இன்றைய போட்டியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; ஜடேஜா தனது வேலையை சரியாக செய்தது பாராட்டத்தக்கது: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

பர்மிங்காம்: இங்கிலாந்து-இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியா 50 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று பர்மிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா நாட்அவுட்டாக 29 பந்தில் 5 பவுண்டரியுடன் 46 ரன் எடுத்தார். கேப்டன் ரோகித்சர்மா 31 (20பந்து), ரிஷப் பன்ட் 26, பாண்டியா, தினேஷ் கார்த்திக் தலா 12, சூர்யகுமார் யாதவ் 15 ரன் அடித்தனர். கோஹ்லி ஒரு ரன்னில் அவுட் ஆனார். இங்கிலாந்து பந்துவீச்சில், ஜோர்டன் 4, ரிச்சர்ட் க்ளீசன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன்ராய் புவனேஸ்வர்குமாரின் முதல் பந்திலேயே கேட்ச் ஆனார். கேப்டன் பட்லர் 4, மாலன் 19, லிவிங்ஸ்டன் 15 ரன்னில் வெளியேறினர். அதிகபட்சமாக மொயின் அலி 35 ரன் அடித்தார். 17 ஓவரில் 121 ரன்னுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. இதனால் 49 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. டேவிட் வில்லி நாட்அவுட்டாக 33 ரன் எடுத்திருந்தார். இந்திய பந்துவீச்சில் 3 ஓவரில் ஒரு மெய்டனுடன் 15 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய புவனேஸ்வர்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார். சாஹல் 2 விக்கெட் எடுத்தார். 3வது மற்றும் கடைசி போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. நேற்று வெற்றிக்கு பின் ரோகித்சர்மா அளித்த பேட்டி:
இங்கிலாந்து எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், இரண்டு போட்டியிலும் நாங்கள் மிக சிறப்பாக விளையாடினோம். வெற்றி பெறுவது அதிக நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் கொடுக்கும். ஜடேஜா மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். இக்கட்டான நிலையில் அவர் அடித்த ரன் தான் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று ஜடேஜா தனது வேலையை சரியாக செய்து கொடுத்தது பாராட்டத்தக்கது. பவர் ப்ளே ஓவர்களின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம். பேட்டிங்கில் அதிக ரன்கள் குவிப்பதும், பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவதும் முக்கியம். அதை நாங்கள் சரியாக செய்துள்ளோம்.

அடுத்த போட்டியில் இதேபோன்று சிறப்பாக விளையாடுவோம். வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்த்தப்பட்டுள்ள வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன. இன்று அவர்களுக்கான வாய்ப்பு கிடைப்பது குறித்து பயிற்சியாளருடன் ஆலோசிப்பேன், என்று தெரிவித்தார். இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியதாவது: தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ரிச்சர்ட் க்ளீசன், ஜோர்டன் சிறப்பாக பந்துவீசினர். பவர்பிளேவில் 3 விக்கெட் இழந்தால் மீண்டு வருவது கடினம், என்றார்.

பட்லர் விக்கெட் முக்கியமானது: புவி ஆட்டநாயகன் விருது பெற்ற புவனேஸ்வர்குமார் கூறியதாவது: பந்து ஸ்விங் ஆகும்போது ரசித்து பந்துவீசுகிறேன். இங்கிலாந்து மைதானங்களில் இந்த முறை பந்து ஸ்விங் அதிகமாக உள்ளது. வெள்ளைப் பந்தை இன்ஸ்விங் செய்வது ஒரு உந்துதலாக உள்ளது. பட்லர் ஒரு அபாயகரமான வீரர் என்பது தெரியும். அவர் பவர்பிளேயை கடந்தால், பெரிய ஸ்கோர் அடிப்பார் என்பதால் அவரின் விக்கெட் முக்கியமானது, என்றார்.

பிட்ஸ்...பிட்ஸ்...பிட்ஸ்...

* ரோகித்சர்மா தலைமையில் இந்தியா அணி தொடர்ச்சியாக 14வது டி.20 போட்டியில் வென்றுள்ளது. டெஸ்ட், ஒன்டே, டி.20 என ஒட்டுமொத்தமாக அவரது தலைமையில் தொடர்ச்சியாக 19 வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் 20 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார்.
* டி.20 போட்டியில் முதல் ஓவரில் புவனேஸ்வர்குமார் 14 விக்கெட் எடுத்து டாப்பில் உள்ளார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி 13, இலங்கையின் மேத்யூஸ் 11 விக்கெட் எடுத்துள்ளனர்.

Tags : Jadeja ,Rohit Sharma , Opportunity for new players in today's match; Jadeja did his job well, commendable: Captain Rohit Sharma Interview
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு