×

மாநகரில் ரூ. 92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட், டவுன் பஸ்கள் செல்வதற்கு 14 தூண்களுடன் மேம்பாலம்; டிசம்பருக்குள் பணி நிறைவடையும்

சேலம்: சேலம் மாநகரில் ரூ. 92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. இங்கு டவுன் பஸ்கள் செல்ல 14 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி டிசம்பருக்குள் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் ஒன்று சேலம். சுமார் 100சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சேலம் மாநகரில், போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமில்லை. இதனை போக்கும் வகையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு, ரூ. 320 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு ரூ. 967 கோடியில் 90க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், 40க்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் ரூ. 92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் அகற்றி விட்டு, அங்கு ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. இதனால், பழைய பஸ் ஸ்டாண்டில் இயங்கி வந்த டவுன் பஸ்கள், தற்காலிகமாக போஸ் மைதானத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் பணிகள் நிறைவடைந்துள்ளது. ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியே செல்வதற்கு மேம்பாலம் அமைக்கும் மும்முரமாக நடந்து வருகிறது.

 இதற்காக அந்த பகுதியில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, திருமணிமுத்தாற்றில் பில்லர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 14 தூண்கள் அமைக்கப்பட்டு, திருவள்ளுவர் சிலை வழியாக செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மேம்பாலம் அமைக்கும் பணிகள் வரும் டிசம்பரில் முடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ. 92 கோடியில் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் நடந்து வருகிறது. இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது, மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரடைந்துள்ளது. ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் மேல் தளத்தில் 25 பஸ்களும், கீழ் தளத்தில் 25 பஸ்களும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 150 கடைகள் கட்டப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கார், டூவீலர் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. 4 லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை, ஓமலூர் செல்லும் பஸ்கள் மேம்பாலம் வழியாகவும், சீலநாயக்கன்பட்டி, மல்லூர், ஆட்டையாம்பட்டி செல்லும் பஸ்கள் ஆட்கொல்லி பாலம் வழியாகவும் செல்லும். இதற்காக 14 பில்லர்கள் அமைக்கப்பட்டு, மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த பணி இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும். அதற்காக பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மண் பரிசோதனைக்கு பிறகே பில்லர்கள் அமைக்கப்படும். ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். பஸ் ஸ்டாண்ட் அருகே மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர். 


Tags : In the city Rs. 92 crore for Erudku bus stand, flyover with 14 pillars for town buses; The work will be completed by December
× RELATED வெயில், மழையில் கட்சி பணியாற்றிய...