×

மேட்டுப்பாளையம்-குன்னூர் செல்லும் பர்னஸ், ஆயில் மலை ரயில் என்ஜினை; டீசல் என்ஜினாக மாற்றம் செய்து சாதனை

குன்னூர்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பர்னஸ் ஆயில் மலை ரயில் என்ஜினை டீசல் என்ஜினாக மாற்றம் செய்து குன்னூர் பணிமனை சாதனை செய்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மார்க்கமாக ஊட்டிக்கு மலை ரயில் போக்குவரத்து நூற்றாண்டுகளை கடந்து இயக்கப்பட்டு வருகிறது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் ரயில் என்ஜினும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்த ரயில் என்ஜின் அதிக அளவில் மாசு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. எனவே உச்சநீதிமன்றம் பர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்படுவதை மாற்றியமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து வனப்பகுதியில் வழியாக செல்லும் இந்த எஞ்சினை பர்சனஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் பணியை குன்னூர் ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். குன்னூர் பணிமனை சீனியர் டெக்னீசியன் மாணிக்கம் தனது முயற்சியில் பர்னஸ் ஆயில் என்ஜினை தற்போது டீசல் என்ஜினாக மாற்றம் செய்துள்ளார். இந்த திட்டம்‌ வெற்றி அடைந்துள்ளது. அதேபோல் தற்போது இனி வரும் காலங்களில் மீதமுள்ள பர்னஸ் ஆயில் என்ஜின்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி டீசல் என்ஜினாக மாற்றம் செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது. இது குறித்து சீனியர் டெக்னீசியன் மாணிக்கம் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக குன்னூர் மலை ரயில் பனி மணையில் பணிபுரிந்து வருகிறேன்.

இந்த மலை ரயிலில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட காலத்தில் இருந்து பணியாற்றி வருகிறேன். நிலக்கரி நீராவி என்ஜின் இயக்க நான்கு மணி நேரத்திற்கு முன்பாக தீ பற்ற வைக்க வேண்டும் போன்ற பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்தது. பின்னர் 2002ம் ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் நிலக்கரி நீராவி என்ஜினை பர்னஸ் ஆயில் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டம் சரி வர செயல்படவில்லை. பின்னர் எனது சொந்த முயற்சியில் நிலக்கரி நீராவி என்ஜினை பர்னஸ் ஆயில் என்ஜினாக மாற்றம் செய்து அது வெற்றியடைந்தது. தற்போது பர்னஸ் ஆயில் என்ஜினை டீசல் என்ஜினாக மாற்றம் செய்து அதுவும் வெற்றியடைந்துள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் மலை ரயில் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. மேலும் பணிமனையில் உள்ள பர்னஸ் என்ஜினை டீசல் என்ஜினாக மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். பர்னஸ் ஆயில் என்ஜினை டீசல் என்ஜினாக மாற்றம் செய்தது எளிதான வேலை அல்ல. இது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது என்று ரயில்வே துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறினர்.

Tags : Mettupalayam ,Coonoor Barnes ,Oil , Mettupalayam-Coonoor Barnes, Oil Hill Train Engine; Achievement by changing to diesel engine
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது