×

இலங்கையில் விடிய விடிய மக்கள் போராட்டம்; பிரதமர் ரணில் ராஜினாமாவையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி பதவி விலகுகிறார்: 2 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா

கொழும்பு: இலங்கை மக்களின் கடும் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்தார். தலைமறைவாக உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, வரும் 13ம் தேதி பதவி விலக உள்ளதாக சபாநாயகர் நேற்றிரவு அறிவித்தார். இதற்கிடையே அமைச்சர்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டம் விடிய விடிய தொடர்ந்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில், கடந்த மூன்று மாதமாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதன்பின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக கடந்த  இரு மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். ஆனால், அவரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நாட்டை மீட்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால், சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் மக்கள் இறங்கினர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுடன் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும், மாணவர் அமைப்புகளும், பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் கைகோர்த்தனர். அவர்களுடன் ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மதியம் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர். போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் இலங்கை முழுவதுமே பதற்றமாக காணப்படுகிறது. இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும்; தற்காலிக அதிபராக சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும்; அனைத்துக்கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வேண்டும்; விரைவில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் ஆகிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழிவகை செய்யும் பொருட்டும், மக்களின் பாதுகாப்பு கருதியும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13ம் தேதி பதவி விலக முடிவு செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த அபேவர்தா அறிவிப்பு ஒன்றை நேற்றிரவு வெளியிட்டார். அதில், ‘பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். சுமூகமான மாற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார். முன்னதாக, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து, அங்கிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே ரகசிய இடத்தில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரணிலின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் நேற்றிரவு தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்தனர். இலங்கை பாதுகாப்பு படைகளின் ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ள அறிக்கையில், ‘நாட்டில் அமைதி நிலவுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். அதற்காக ராணுவம் மற்றும் போலீசாருக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இருந்தும் அதிபர் மாளிகையானது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இலங்கையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

சர்வதேச நாணய நிதியம் அறிக்கை: அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் ஆகிய இருவரும் பதவி விலக முடிவு செய்துள்ள நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாகி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் நிதி அமைச்சகம் மற்றும் இலங்கையின் மத்திய வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா கருத்து: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வை காணும் பொருட்டு, அந்நாட்டு தலைவர்கள் விரைந்து ெசயல்பட வேண்டும். எந்தவொரு புதிய அரசு அமைத்தாலும், அவை ஸ்திரத்தன்மையுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்யும் வகையில் தீர்வுகளை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இல்லம் எரிப்புக்கு கண்டனம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான இல்லம் கொழும்புவின் 5வது லேனில் உள்ளது. இந்த இல்லத்தை வன்முறை கும்பல் தீவைத்து எரித்தது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘மேலும் வன்முறையை ஏற்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமருக்கு சொந்தமான இல்லத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தீவைப்பு சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்றார். முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மோசமான அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, சாத்தியமான மற்றும் மக்கள் விரும்பும் அரசை அடைவதற்கான இலக்கை நோக்கி மக்கள் பயணிக்க வேண்டும். அதற்காக வன்முறை தேவையில்லை’ என்று கூறியுள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட பதிவில், ‘பிரதமராக ரணில் பதவியை ஏற்றுக்கொண்டதில் இருந்து, அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன; ஆனால் அவரது வீட்டை தீவைத்து எரித்ததை மன்னிக்க முடியாது’ என்று அவர் கூறினார். இதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சனத் ஜயசூரிய மற்றும் மஹாலா ஜயவர்தன ஆகியோரும் பிரதமரின் இல்லம் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமையல் செய்து சாப்பிட்ட மக்கள்: அதிபர் மாளிகைக்குள் நேற்று நுழைந்த மக்கள், அங்குள்ள சொகுசு வசதிகளை முழுமையாக பயன்படுத்தினர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை எடுத்தனர். அவற்றை அவர்கள் எண்ணும் வீடியே சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதேபோல் மிகப் பெரிய சமையல் அறையில் புகுந்த அவர்கள், தாங்களாகவே சமைத்து டைனிங் டேபிள் மீது வைத்து சாப்பிட்டனர். மேலும் அதிபர் மாளிகைக்குள் உள்ள ஜிம் உபகரணங்களையும் பயன்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டனர். இந்த வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளன.

பதுங்கு குழியில் ரகசிய அறை: கொழும்பில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முற்றிலும் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பதுங்கு குழிக்குள் வெவ்வேறு கதவுகள் உள்ளன. மேலும் லிப்ட் வசதிகளும் உள்ளன. பதுங்கு குழியில் அடிப்பகுதியில் மிகவும் ரகசியமான அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது இரும்பு கதவுகளால் திறக்க முடியாத அளவிற்கு உள்ளது. எவ்வாறாயினும், அந்த அறையின் கதவு இதுவரையில் திறக்கப்படவில்லை. அதில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், அந்த ரகசிய அறை குளிரூட்டப்பட்ட அறையாக அமைக்கப்பட்டுள்ளது. அறையின் இரும்பு கதவின் அடிப்பகுதியில் இருக்கும் சிறிய இடைவெளி ஊடாக வரும் குளிர் காற்றின் மூலம் அதனை உணர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sri Lanka ,Ranil ,President ,Gothabaya Rajapakse , Dawn of People's Struggle in Sri Lanka; President Gotabaya Rajapakse resigns on 13th after Prime Minister Ranil resigns: 2 ministers resign suddenly
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...