×

ரூ.9.62 கோடியில் 380 கடைகள், அடிப்படை வசதிகளுடன் நவீனமயமாகும் காங்கயம் வாரச்சந்தை அமைச்சருக்கு; வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பாராட்டு

காங்கயம்: காங்கயம் வாரச்சந்தை மிகப்பெரிய சந்தையாகும். வாரந்தோறும் திங்கட்கிழமையன்று  நடைபெறும் இந்த சந்தைக்கு திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வருவார்கள். மேலும் காங்கயம் சுற்று வட்டார பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களையும், வியாபார பொருட்களையும் கொண்டு வந்து இந்த சந்தையில் விற்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இப்படி வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களும் இந்த சந்தையில் எந்த அடிப்படை வசதிகளும் கடந்த 10 வருடங்களாக செய்து தரப்படாததால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இங்கு அமைக்கப்படும் கடைகளுக்கு தரைத்தளமோ, மேற்கூரையோ அமைத்து தரப்படததால் தங்களது சாக்கு,  தார்பாய் கொண்டு கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். குறிப்பாக மழைக் காலங்களில் தாங்கள் விற்பதற்கு எடுத்து வந்த பொருட்களையும் மழையில் நனையாமல் காப்பாற்றி ஒதுங்கக்கூட இடமில்லாமல் சிரமப்பட்டு வந்தனர். தரையில் பொருட்களை போட்டு  விற்பனை செய்வதால் கூட்டம் நெரிசலில் காலில் மிதித்தும், மழைக்காலங்களில் தண்ணீரில் அடித்தும் செல்கிறது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை கடந்த அதிமுக ஆட்சி கண்டும் காணாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த மே மாதம் ரூ.9.62 கோடி மதிப்பில் 380 கடைகளுடன், அடிப்படை வசதி மேம்படுத்தும் பணிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். வாரச்சந்தையில் 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப்பட உள்ளன. விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய ஏதுவாக கடைகள் அமைக்கப்படுகின்றன. தினசரி மார்க்கெட் கடைகளுக்கு 67 கடைகளும், வியாபாரிகள் வாரந்தோறும் நடக்கும் சந்தைக்கு 304 கடைகளும் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளுக்கு வந்து செல்ல வசதியாக வழித்தடம் அமைக்கப்படுகிறது. மழை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பாக வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், அதனை பொதுமக்கள் வாங்கி செய்யும் வகையில் அமைக்கப்படுகிறது.

கறிக்கடைகள் 27 தனியாக ஒதுக்கப்பட்டு சுகாதாரமாக விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளன. ஒரு பெரிய அளவிலான ஒரு குடோனும் இதில் அமைகிறது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் பண பரிவர்த்தனைக்கு ஏடிஎம் சென்டர் ஒன்றும் உள்ளது. பாத்ரூம், டாய்லெட் என 20 அமைக்கப்பட உள்ளது. வரும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த சந்தைக்கு குடிநீர் வசதி, 24 மணி நேர  பாதுகாப்பு, செக்யூரிட்டி ரூம் அமைக்கப்படுகிறது. சந்தையை சுற்றி தீயணைப்பு வாகனம் எளிதில் வந்து செல்ல 24 அடி அளவில் சாலை வசதி என நவீன முறையில் செய்யப்பட உள்ளது.

கடந்த 10 வருடத்திற்கு மேலாக சந்தையில் அடிப்படை வசதி செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சந்தையை மேம்படுத்துவதாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ நடராஜ் வாக்குறுதி கொடுத்தார். நிறைவேற்றவில்லை. அதன் பிறகு அதிமுக கூட்டணியில் எம்எல்ஏவான தனியரசுயும் இந்த சந்தை மேம்படுத்துவதாக தெரிவித்தார். அவரும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சந்தையை மேம்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார். தற்போது இதனை மேம்படுத்த ரூ.9.62 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சந்தை நவீன முறையில் மேம்படுத்தும் பணி ஒரு வருடத்தில் முடிக்கப்பட உள்ளது. அமைச்சரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Kangayam Varachandha ,Minister , 380 shops at Rs.9.62 crore, modernized with basic facilities, Kangayam weekly market to minister; Traders, farmers, public appreciation
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...