×

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு, சிகிச்சை அளிக்க மறுத்து ஸ்டூலை எத்திய டாக்டர்; வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க மறுத்து, பணியில் இருந்த டாக்டர் ஸ்டூலை எத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்ைக மாவட்டம், திருப்புவனம், ரயில்வே பீடர் ரோடு மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த காசி விஸ்வநாதன் மனைவி சவுந்தர்யா(24). கர்ப்பிணியான இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு, கால் பெருவிரலில் அடிபட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் பெற்றோர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பணியில் இருந்த டாக்டர் பாலகிருஷ்ணன், காயமடைந்த கர்ப்பிணி சவுந்தர்யாவை வெளியே காக்க வைத்து விட்டு செல்போனை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். உள்ளே சென்ற பெண்ணையும் அவரது தந்தை பாலசண்முத்தையும் ‘யாரைக் கேட்டு உள்ளே வந்தே... வெளியே போ’ என்று பேசியதாக கூறப்படுகிறது.பின்னர் சவுந்தர்யாவை அவசர நோயாளிகளை பரிசோதனை செய்யும் படுக்கையில் ஏறி படுக்க சொல்லியுள்ளார். உயரமாக இருப்பதால் கர்ப்பிணியான தன்னால் ஏற முடியாது என அருகில் இருந்த நோயாளிகள் அமரும் மர ஸ்டூலில் அமர முயன்றுள்ளார்.

ஆத்திரமடைந்த டாக்டர் பாலகிருஷ்ணன் ஸ்டூலை எட்டி உதைத்து தள்ளி விட்டதுடன் சிகிச்சை அளிக்க முடியாது என கூறி கர்ப்பிணியையும், அவரது பெற்றோரையும் கடுமையாக பேசி வெளியேற்றியுள்ளார். உடன் இருந்த மருத்துவ பணியாளர்களும் கோபமாக பேசியுள்ளனர். இதனை சிலர் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வீடியோ வைரலானது. சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தலைமையிலான குழு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruppuvanam Government Hospital , A doctor refused to give treatment to a pregnant woman in Tiruppuvanam Government Hospital and threw stool at her; A video that goes viral on websites
× RELATED சிக்கலான பிரசவத்தை அசத்தலாக செய்து முடித்த திருப்புவனம் ஜிஹெச்