×

கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின?

சென்னை: சென்னையில் எம்பி கார்த்தி சிதம்பரம் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.கடந்த 2009-14ம் ஆண்டு காலகட்டத்தில் ப.சிதம்பரம் ஒன்றிய  அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபின் மான்சா நகரில் அமைக்கப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமானது, சீனாவை சேர்ந்த ஷான்டாங் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்சன் கார்ப் (செப்கோ) என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அப்போது மின் திட்டத்தை கட்டமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன. எனவே, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தை அவரது நெருங்கிய கூட்டாளிகள் மூலம் அணுகியதாக கூறப்பட்டது. இதையடுத்து அரசு விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டன. இதற்காக ₹50 லட்சம் லஞ்சமாக தரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் உள்ளிட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியது தொடர்பாக கடந்த மே மாதம் 17ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், டெல்லி, மும்பை, பஞ்சாப் உள்பட 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிற்கு சென்றிருந்ததால், அவரது வீட்டில் ஒரு அறையை மட்டும் சிபிஐ அதிகாரிகள் திறக்காமல் சென்றுவிட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ அதிகாரிகள் சேர்த்திருந்ததால், சோதனை முடிந்த மறுநாளே அவரை கைது செய்தனர். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று, வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் மே மாதம் 26ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் 7 பேர் 2வது முறையாக நேற்று மீண்டும் திடீரென கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திறக்கப்படாமல் இருந்த கார்த்தி சிதம்பரத்தின் அறையை திறந்து ஏதேனும் ஆவணங்கள் உள்ளனவா என சோதனையிட்டனர். பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுமார் 3 மணி நேரம், 7 அதிகாரிகளுடன் நடந்த இந்த சோதனையின் சில முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், சிபிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே, கடந்த 2007ம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா ₹305 கோடி வெளிநாட்டு நிதியை பெற உதவியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதேபோல் ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும், அவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



Tags : CBI ,Karti Chidambaram , Karthi Chidambaram at home CBI officials raid: Key documents caught?
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...