×

முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதரவாளர் வீடு ஆபீசில் 4வது நாளாக ரெய்டு

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் வீடு, அலுவலகத்தில் 4 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நண்பரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான இன்ஜினியர் சந்திரசேகர் வீட்டில் கடந்த 8ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சொத்து மற்றும் நிறுவனங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. மேலும் சந்திரசேகரின் தந்தை வீடு, ஆலயம் அறக்கட்டளை அலுவலகம் என 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முடித்தனர். இதேபோல் எஸ்.பி.வேலுமணியின் நண்பரான சந்திரபிரகாஷின் பீளமேட்டில் உள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இங்கு நேற்று 4வது நாளாக சோதனை நடந்தது. மேலும் சந்திரபிரகாஷ் வசித்து வரும் பீளமேடு கொடிசியா வளாகம் அருகே அடுக்குமாடி அபார்ட்மென்ட் வீட்டிலும் வருமான வரித்துறையினர் 4வது நாளாக நேற்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒப்பந்த பணிகள் மூலம் பெறப்பட்ட வருமானம்,  பல்வேறு நிறுவனங்கள் மூலமாக கிடைத்த வருமானம் மற்றும் வருமான வரித்துறைக்கு செலுத்திய வரி விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அங்கிருந்த ஆவணங்கள் சோதனைக்கு எடுக்கப்பட்டது. நிறுவன ஊழியர்களிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சந்திரபிரகாஷ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை முடிந்த பின்னர் நேற்றும் அவரிடம்  இரவு, பகலாக  விசாரித்தனர்.  எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மூலமாக கணக்கில் காட்டாத பணம் கேசிபி நிறுவனத்திற்கு வந்ததா?, கேசிபி நிறுவனத்தின் மூலமாக எஸ்.பி. வேலுமணி குடும்பத்தினருக்கு பணம் வழங்கப்பட்டதா? என விசாரணை நடந்தது. எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான வருமானம், அவர்களது பின்னணியில் உள்ள நிறுவனங்களை மையப்படுத்தி வருமான வரித்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அடிப்படையில் முக்கிய ஆதாரங்களை வைத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் தயாராகி வருகின்றனர்.

Tags : Former minister ,Velumani , Former minister Velumani supporter house Raid on 4th day at office
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...