×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கபினி, கேஎஸ்ஆர் அணைகளில் 23,000 கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி மற்றும் கேஎஸ்ஆர் அணைகளில் இருந்து 23,511 கனஅடி உபரிநீர் நேற்று திறக்கப்பட்டது. இந்த தண்ணீர், இன்று (10ம் தேதி) மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதில் 124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 121 அடியாகவும், 65 அடி உயரம் கொண்ட கபினியின் நீர்மட்டம் 61.50 அடியாகவும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், இரு அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கேஎஸ்ஆர் அணையில் இருந்து விநாடிக்கு 13,511 கன அடியும் தண்ணீர் நேற்று மாலை திறக்கப்பட்டது. இந்த உபரி நீர், இன்று (10ம் தேதி) காலை முதல் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Tags : Kaveri ,KSR ,Cauvery , Heavy rains in Cauvery catchment areas At Kabini, KSR dams 23,000 cubic feet of water opening
× RELATED காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4...