பாஜ.வுடன் இணைந்து செயல்படும் ஷர்மிளா ஜெகன் தாயார் பதவி விலகல் பின்னணியில் மாஸ்டர் பிளான்: தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க முயற்சி

திருமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இருந்து ஆந்திர முதல்வரின் தாய் பதவி விலகியதின் பின்னணியில் பாஜ.வின் மாஸ்டர் பிளான் இருப்பதாக கூறப்படுகிறது.ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கிறார். ஆந்திராவை தொடர்ந்து தெலங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்ற இக்கட்சி முயற்சி செய்து வருகிறது. அதற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா, ‘தெலங்கானா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக கட்சி வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது பாத யாத்திரைகள், போராட்டங்கள் மூலமாக தனது கட்சி வளர்ச்சி பணியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர். காங் கட்சியின் கவுரவ தலைவராக இருந்த ஜெகன் மோகனின் தாய் விஜயம்மா, நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். தெலங்கானாவில் தனது மகள் ஷர்மிளாவுக்கு துணையாக கட்சி வளர்ச்சி பணியை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார். இதன் பின்னணியில் பாஜ உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆளும் டிஆர்எஸ் கட்சி வலுவாக உள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க பாஜ முயற்சிக்கிறது. அதற்கு ெஜகனின் உதவி தேவைப்படுவதால் பாஜ.வின் ஆலோசனைப்படிதான் ஷர்மிளா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானாவில் களம் இறங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஷர்மிளாவின் அரசியல் பிரவேசத்தால் சந்திரசேகர ராவ் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். அதற்கு முன்பு வரை பாஜ.வுடன் சுமூக உறவு வைத்திருந்த அவர், தற்போது அக்கட்சியை கடுமையாக சாடி வருகிறார். பாஜ.வின் கணக்குப்படி ஷர்மிளா தனியாக போட்டியிடுவதால், சந்திரசேகர ராவின் சிறுபான்மை ஓட்டு வங்கி சிதறி, பாஜ.வுக்கும் ஷர்மிளாவின் கட்சிக்கும் அதிக வாக்குகள் கிடைக்கும். இதன்மூலம், தேர்தலுக்கு பின்னர் ஷர்மிளா மைனாரிட்டி ஆட்சி அமைத்தாலும் பாஜ கை கொடுத்து கூட்டணி ஆட்சியில் பங்கேற்கும் என ெதரிகிறது.

வாழ்நாள் தலைவர் ஜெகன்

ஆந்திராவில் குண்டூரில் நடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு நேற்றுடன் முடிந்தது. தற்போது, இக்கட்சியின் தலைவராக உள்ள ஜெகன் மோகனை, கட்சியின் வாழ்நாள் தலைவராக நியமித்து, இந்த மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.

Related Stories: