×

படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேவுக்கு மக்கள் அஞ்சலி: 12ம் தேதி இறுதிச்சடங்கு

டோக்கியோ: ஜப்பானில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக டோக்கியோவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே, கடந்த 2020ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். அவர், நேற்று முன்தினம் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலுக்காக நாரா நகரில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, 41 வயது நபர் ஒருவர் அபேயின் பின்னால் இருந்து, நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் பலியானார்.  இந்நிலையில், அபேயின் உடல் நேற்று நாரா மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி வாகனம் மூலமாக, தலைநகர் டோக்கியோவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அபேயின் மனைவி அகி அபே கண்ணீர் மல்க, காரில் அமர்ந்தபடியே உடலை எடுத்து வந்தார். வீட்டின் முன் குவிந்திருந்த மக்கள், அபேவுக்கு அஞ்சலி செலுத்தினர். ஜப்பான் பிரதமர் கிஷிடோ, அபேயின் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

குவாட் நாடுகள் அஞ்சலி
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமைந்துள்ள குவாட் அமைப்பு, மறைந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மோடி, அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் ஆகியோர் நேற்று விடுத்த கூட்டறிக்கையில், ‘நமது ஒவ்வொரு நாட்டுடனும், ஜப்பான் உடனான உறவில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் அபே. குவாட் அமைப்பு நிறுவுவதிலும் அவர் முக்கிய பங்காற்றி உள்ளார். அமைதியான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய எங்கள் பணியை இரட்டிப்பாக அதிகரிப்பதன் மூலம் அபேயின் நினைவை போற்றுவோம்,’ என கூறப்பட்டுள்ளது. மேலும், அபேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அரசு கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் நேற்று பறக்கவிடப்பட்டது.

மத குருவுக்கு வைச்ச குறி
அபேயை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் டெட்சுயா யமகாமியிடம் (41) போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். அவன் விசாரணையில், அபேயின் செயல்கள் பிடிக்காததால் கொன்றாக கூறி உள்ளான். மேலும், அபே தொடர்புடைய ஒரு மத அமைப்பைச் சேர்ந்த மத குருவை கொல்லத்தான் டெட்சுயா முதலில் திட்டமிட்டுள்ளான். அவர் பிரசாரத்திற்கு வராததால் அபேயை கொன்தறாகவும் மீடியா தகவல்கள் கூறுகின்றன.




Tags : Abe , Tribute
× RELATED கட்சி நிதி திரட்டியதில் முறைகேடு ஜப்பான் மாஜி அமைச்சர் கைது