சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து போனதால் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியின் எதிர்காலம் என்ன?.. சோனியா, ராகுலை காங். தலைவர் சந்தித்ததால் பரபரப்பு

புதுடெல்லி: சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் என்னாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே சோனியா, ராகுலை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் கவிழ்ந்தது. சிவசேனா இரண்டாக பிளவுபட்டுள்ளதால், தற்போது மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் நடந்த சட்ட மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் சில எம்எல்ஏக்கள் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது, நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி கொறடா உத்தரவை மீறி சில எம்எல்ஏக்கள் வாக்களித்தது ஆகியன மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேல் டெல்லி வந்தார். அவர், கொரோனாவில் இருந்து மீண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். ராகுல் காந்தியையும் சந்தித்து மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘மகாராஷ்டிரா மாநில தலைவர் நானா பேடேல் கட்சி தலைமையிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். எம்எல்சி தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி மாறி ஓட்டளித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் பாஜக ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றோம். ஆனால், தற்போது சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி வீழ்ந்துள்ளதால், காங்கிரஸ் தற்போது வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அதற்கு கட்சித் தலைமை கிரீன் சிக்னல் கொடுத்தது. வரவிருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாராக  வேண்டும். சிவசேனா - தேசியவாத காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டால் காங்கிரசுக்கு அதிக இழப்பு ஏற்படும்’ என்றனர். சோனியா மற்றும் ராகுலைச் சந்தித்த பிறகு நானா படேல் அளித்த பேட்டியில், ‘தற்போதைக்கு எங்கள் கட்சி எதிர்க்கட்சியாக செயல்படும். நாங்கள் தற்போதைக்கு  ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் உள்ளோம். இப்போது ஒன்றாக இருக்கிறோம்; மற்ற கட்சி என்ன முடிவுகளை எடுக்கப் போகிறது என்பதை என்னால் சொல்ல முடியாது.

அரசியல் சூழ்நிலைகள் என்ன என்பதை இப்போதே சொல்ல முடியாது’ என்றார். சிவசேனாவின் பெரும்பாலான எம்பி, எம்எல்ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிருப்தி தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்துவிட்டதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா என்ன ெசய்யப் போகிறது என்பது கேள்வியாக உள்ளது. மேலும் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த போது தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியும் ராஜினாமா செய்ததால் சட்டப் பேரவையில் எதிர்கட்சி வரிசையில் அமரும் வாய்ப்பும் போனது. அவரது மகன் ஆதித்யா தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதனால், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா எடுக்கும் அடுத்தடுத்த நகர்வுகளை பொருத்தே  ‘மகா விகாஸ் அகாடி’யின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித் ஷாவிடம் அமைச்சர்கள் பட்டியல்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்த பிறகு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் முதன் முறையாக நேற்று டெல்லி வந்தனர். அவர்கள் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிராவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டணி அரசில், அமைச்சர்கள் பதவி யார் யாருக்கு வழங்குவது? என்ற பட்டியல் இறுதி செய்யப்பட்டது. மேலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் 10 முதல் 12 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வரவாய்ப்புள்ளதால், அவர்களின் நிலைபாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் ஏக்நாத், பட்நாவிஸ் ஆகிய இருவரும் இன்று மாலை பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: