×

திருச்சி அருகே சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் மறியல்: பழிவாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு காரில் நேற்றிரவு சென்றார். திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 11.45 மணிக்கு சென்றார். சசிகலாவுடன் ஆதரவாளர்கள் 4 கார்களில் முன்னும், பின்னும் சென்றனர். திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து சசிகலாவின் ஆதரவாளர்களின் ஒரு கார் சென்றது. அதன்பிறகு சசிகலா கார் சென்றது. அப்போது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கச்சாவடி ஸ்கேன் ஸ்டிக் மோதியது. இதனால் பிரேக் அடித்து சசிகலா கார் நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்து சசிகலாவுடன் சென்ற ஆதரவாளர்கள், தங்களது கார்களை அங்கேயே நிறுத்தி விட்டு கீழே இறங்கினர்.இதை பார்த்ததும் தன்னை தாக்கி விடுவார்கள் என்று பயந்து சுங்கச்சாவடி ஊழியர் ஓடிவிட்டார். அப்போது துவாக்குடி சுங்கச்சாவடியில் இதுபோன்ற சம்பவம் சசிகலாவுக்கு மூன்று முறை நடந்துள்ளது. தன்னை பழிவாங்கும் நோக்கில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், சுங்கச்சாவடி மேலாளர் உடனே வர வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களிடம் சசிகலா கூறினார். இதைதொடர்ந்து சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மேலாளர் வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று சசிகலா கூற, அவருடன் வந்த ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்த தகவலறிந்த ரோந்து பணியில் இருந்த திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி (பொ) இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டி சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் இதுபோல் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டார். மேலும் இந்த பிரச்னை குறித்து நீங்கள் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என்று சசிகலா தரப்பிடம் போலீசார் கூறினர்.

அதற்கு சசிகலா தரப்பினர் புகார் கொடுப்பதாக தெரிவித்தனர். இரவு 11.45 மணி முதல் நள்ளிரவு 1.15 மணி வரை ஒன்றரை மணி நேரம் போராட்டம் நடத்தி விட்டு சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறுகையில், சசிகலா விஐபி செல்லும் வழியில் வராமல் சாதாரண வாகனங்கள் செல்லும் பொது வழியில் சென்றுள்ளார். அதனால் தான் இதுபோன்ற பிரச்னை நடந்து விட்டது என்றனர்.

கட்டணம் கட்ட மறுப்பு சசிகலா தகராறு
சசிகலாவும் அவருடன் வந்த கார்களும் எப்போதும் சுங்க கட்டணம் கட்டுவதில்லை. ஒவ்வொரு முறையும் இலவசமாகவே பயணம் செய்கின்றனர். கேட்டபோதெல்லாம் தகராறு செய்கின்றனர். நேற்றும் அதேபோல அவருக்கு மட்டுமல்லாமல், அவரது காருக்கு முன்னும், பின்னும் செல்லும் கார்களும் இலவசமாக பயனம் செய்யும்படி கேட்டனர். மேலும் அதோடு டோல்கேட்டில் நிற்காமல் செல்வதற்காக ஏற்கனவே வரிசையில் முன்னால் நின்ற கார்களையும் இலவசமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். நாங்கள் கேட்டபோது மறுத்து தகராறில் ஈடுபட்டனர். இதனால்தான் சில வாகனங்களை நிறுத்துவதற்காக கேட் போட்டோம். இதற்காக சசிகலாவும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டார் என்று சுங்கச் சாவடி ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Sasigala ,Sunghaavadi ,Trichy , Sasikala strikes with supporters at toll booth near Trichy: Revenge allegation
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்