×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை!: கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி தண்ணீர் திறப்பு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள முக்கிய அணைகளான கே.எஸ்.ஆர். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து தற்போது வினாடிக்கு தலா 10,000 கனஅடி வீதம் மொத்தமாக 20,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இன்று காலையில் கே.எஸ்.ஆர். அணையில் இருந்து சுமார் 3,200 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து சுமார் 4,200 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தினாலும், அணைகள் முழு கொள்ளளவை எட்டிவரும் காரணத்தினாலும் 2 அணைகளில் இருந்தும்  நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தொடர் மழையால் இந்த நீர் வெளியேற்றத்தின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.எஸ்.ஆர். அணையில் தற்போது 122 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது.

அணை முழு கொள்ளளவை எட்ட வெறும் 3 அடி மட்டுமே மீதம் இருக்கிறது. அணைக்கு 33 ஆயிரத்திற்கும் மேல் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 10,000 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மறுபுறம் கடல்மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்ட மேலும் 3 அடிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. கபினி அணைக்கு தற்போது 14,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 10,000 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : Karnataka State S.S. ,Kaviri ,Kabini Dams , Heavy rains, Karnataka, KSR, Kabini Dam, Cauvery, water
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...