×

ரெடி ஃபார் ரிஷி: பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளிக்கு வாய்ப்பு..ட்விட்டரில் பிரச்சார வீடியோ வெளியீடு..!!

லண்டன்: பிரிட்டனின் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் போட்டியிடுகிறார். ரெடி ஃபார் ரிஷி என தனது பிரச்சாரத்தை ட்விட்டரில் அவர் தொடங்கியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலர் இந்த போட்டியில் இணைந்துள்ள நிலையில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக்கும் இதில் இணைந்துள்ளார். தனது பிரச்சார வீடியோவை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

ரெடி ஃபார் ரிஷி என குறிப்பிட்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் நாட்டின் பிரதமர் பதவிக்கு தான் நிற்பதாக அவர் அறிவித்துள்ளார். அந்த வீடியோவில் தனது குடும்பம் குறித்து அறிமுகத்தோடு தொடங்கும் ரிஷி சுனக், இங்கிலாந்து தங்களுக்கு எப்படி வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்பதை விளக்கியுள்ளார். அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் தனது நோக்கம் என்றும் இந்த தருணத்தில் நாம் எடுக்கும் முடிவு, நமது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை சிறப்பாக்க கிடைக்கும் வாய்ப்பு என்றும் ரிஷி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு போரிஸின் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தவர்களில் ரிஷி சுனக்கும் ஒருவர். தொழிலதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி, கொரோனா காலத்தில் நிதி அமைச்சராக எடுத்த முடிவுக்கு பாராட்டையும், எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷி சுனக் வீடியோவில் பேசியதாவது:

இந்த தருணத்தை நாம், நேர்மையாக, தீவிரமாக, உறுதி தன்மையுடன் எதிர்கொள்ள போகிறோமா அல்லது ஆறுதல் தரக்கூடிய கற்பனை கதைகளை நமக்கு நாமே கூறிக்கொண்டு இந்த தருணத்தை மட்டும் சரி செய்து, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக்க போகிறோமா? என வினவியிருக்கிறார். இந்த நேரத்தை யாராவது ஒருவர் பிடித்துக்கொண்டு, சரியான முடிவை எடுக்க வேண்டும். அதனால்தான் நான் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவராகவும், உங்கள் அடுத்த பிரதமராகவும் ஆக நிற்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.


Tags : Rishi ,Britain ,twitter , Ready for Rishi, British Prime Minister, Indian origin, campaign video
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...