மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்தியாவில் மரியாதை: தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது

புதுடெல்லி: மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்தியாவில் மரியாதை செய்யப்பட்டது. இன்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67), நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில், அவர் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், ஷின்சோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஷின்சோ அபே மறைவை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி, நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. அதேபோல் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம், அதிபர் மாளிகையில் அந்நாட்டின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஷின்சோ அபே உருவம் பொறித்த மணற்சிற்பம் செய்யப்பட்டு, அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

Related Stories: