செஞ்சி அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 30 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

செஞ்சி : செஞ்சி அருகே கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 30 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செஞ்சி அடுத்த கம்மந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் தங்கராஜ். இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். நேற்று மாலை இவரது கரும்பு பயிரை சுற்றி பார்ப்பதற்கு சென்ற போது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர், இதுதொடர்பாக கம்மந்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர், செஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த நாட்டு வெடிகுண்டுகள், காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக யாரேனும் பதுக்கி வைத்திருந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக வைத்துள்ளனரா? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: