×

இணையே... என் உயிர் துணையே!

நன்றி குங்குமம் தோழி

லீலா பிரசாத்-சங்கீதா

நாங்கள் காதலிக்கத் துவங்கியபோது லீலாபிரசாத் நார்மல். துறுதுறுன்னு வயசுக்கே உள்ள வால் தனம்.. ஜாலி.. சந்தோசம்.. அரட்டை.. நண்பர்களோடு ஊர் சுற்றல்னு.. வழக்கமான காதலர்களாய் வலம் வந்தோம். திடீரென நடந்த சாலை விபத்தில் எங்கள் காதல் சட்டுன்னு தலைகீழா மாறியது. ஆமாம். லீலா பிரசாத்திற்கு முதுகு தண்டுவடத்தில்(spinal cord) பலமான அடி. உயிர் மட்டும் இருக்க.. நடக்க முடியாமல் மருத்துவமனையில் படுத்த படுக்கையாகிவிட்டார். பிறகு கிட்டதட்ட 12 வருடம் போராட்டம்தான். கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் நேரத்தில் எங்கள் திருமணம் நடந்தது எனப் பேச ஆரம்பித்தார் சங்கீதா.

அது 2008. நான் சி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சென்டரில் பேக்லிட்டி. அங்கே கோர்ஸ் படிக்க வந்தவர்தான் லீலாபிரசாத். தினமும் வகுப்பு.. நட்பு..போன்ல கடலை போடுறது.. பிறகு சண்டை..சமாதானம் இப்படி சாதாரணமாக எல்லா நட்பையும் போலத்தான் ஆரம்பித்தது எங்களின் நட்பும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு கட்டத்தில் எங்களுக்குள் ஒரு ஈர்ப்பை உணர்ந்தோம். இப்படியே மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் திடீரென ஒரு நாள் லீலாபிரசாத்தைக் காணவில்லை.

அவர் மொபைலுக்கு போன் செய்தால் மொபைல் சுவிட்ச் ஆஃப். தெரிந்த நண்பர்களிடம் விசாரித்ததில் யாரும் சரியான தகவல் தரவில்லை. கிட்டதட்ட மூன்று நான்கு மாதங்கள் இப்படியே கடந்தது. ஒரு சில நண்பர்கள் மூலம் அவருக்கு விபத்து நடந்துள்ளது என்பதை மட்டும் அறிந்தேன். அவரின் அம்மா எண்களைத் தேடிக் கண்டுபிடித்து, தொலைபேசியில் பேசியபோது, லீலாபிரசாத் விபத்தில் இறந்துவிட்டார் எனத் தெரிவித்தார் என கண்ணீர் கண்களைத் திரையிட விவரித்தவரைத் தொடர்ந்தார் அவரின் கணவர் லீலா பிரசாத்.

எனக்கு விபத்து நடந்தது 2012ல். அம்மா, அப்பா, தம்பி என சாதாரண மிடில் க்ளாஸ் ஃபேம்லி என்னுடையது. என் அம்மா ஆசிரியர். நான் பி.பி.ஏ. முடித்து ஓ.எம்.ஆரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தின் அலுவலகப் பிரிவில் பணியில் இருக்கிறேன்.  நான் பணியாற்றிய நிறுவனத்தில் 14 பேரை தேர்வு செய்து 3 மாதம் பயிற்சி எடுக்க சிங்கப்பூர் அலுவலகத்திற்கு அனுப்புகிறார்கள். அதற்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் அன்று என் பிறந்தநாள் வேறு.

இந்த இரண்டு சந்தோசத்தையும் நண்பர்களோடு கொண்டாட கிளம்பினேன். நான் ஓ.எம்.ஆர் சர்வீஸ் சாலையில் டூவீலரில் நண்பர்களுக்காக காத்திருக்க.. வேகமாக வந்த கார் ஒன்று என் மீது மோதிய நொடியில், நான் டூ வீலரோடு, சர்வீஸ் சாலையை விட்டு எகிறி சாலையின் நடுவில் இருந்த இரும்புத் தடுப்பு வேலியில் (divider) முதுகு பலமாக அடிபட அப்படியே கீழே விழுகிறேன். என் இடது காலிலும், முதுகு தண்டுவடத்திலும் பலத்த அடி.

அடுத்த சில நொடிகளில் நான் அரசு பொது மருத்துவமனையில் அவசரப் பிரிவில் இருக்கிறேன். சரியான முறையில் அங்கு மருத்துவம் கிடைக்காமல் போகவே, என் பெற்றோர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு என்னை கொண்டு செல்கின்றனர். நான் மார்புக்குக் கீழே உணர்வின்றி செயலிழந்து கிடக்க, என்னை பரிசோதித்த மருத்துவர்கள், முதுகு தண்டுவடம் உடைந்திருப்பதையும், இனி எழுந்து நடக்கவே முடியாது என்பதையும், இனி உங்கள் மகனை பொம்மை மாதிரி படுக்க வச்சு பார்க்க வேண்டியதுதான் எனவும் சொல்கிறார்கள்.

ஸ்பனைல் சர்ஜன் ஒருவரின் ஆலோசனையில், ஸ்பைனல் ஆபரேஷன் செய்தால், வீல்சேரில் உட்கார வைக்கும் நிலையினை வேண்டுமானால் கொண்டுவரலாம் எனச் சொல்ல.. பெற்றோர் ஒப்புதலோடு சர்ஜரி நடந்தது. எங்கள் வீடு.. நிலம்.. இருந்த சேமிப்பு என எல்லாமும் கரைய.. ஆறு மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையிலே படுத்த படுக்கையாகிக் கிடக்கிறேன். இந்த நிலையில்தான் என்னைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் சங்கீதா என்னைத் தேடியிருக்கிறார்.

நண்பர்கள் மூலமாக சங்கீதா என்னைத் தேடும் செய்தி என் காதில் விழுந்தது. நானோ வாழ்க்கையின் உச்சபட்ச வெறுப்பில், படுத்த படுக்கையாய் பிறர் உதவியில் உபயோகமற்றவனாய் கிடக்க, எனக்கு காதல் ஒரு கேடா என நினைத்து, சங்கீதா என்னைத் தேடி மருத்துவமனைக்கோ அல்லது வீட்டிற்கோ வந்தால் நான் இறந்துவிட்டேன் எனச் சொல்லிவிடுங்கள் என என் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் சொல்லி இருந்தேன். அவர்களும் என்னைப் பற்றிய சரியான விபரத்தை சங்கீதாவிடம் தெரிவிக்கவில்லை. இடைப்பட்ட மாதங்களில் சங்கீதா என் விபத்தை அறிந்து மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். ஆனால் நான் இருந்த வார்டுக்குள் வர அனுமதி கிடைக்காமல் என்னைப் பார்க்காமலே திரும்பி இருக்கிறார்.

நான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றபின், எப்படியோ என் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து அங்கேயே வந்துவிட்டார் என கிட்டதட்ட பத்துமாத இடைவெளியில் நிகழ்ந்த சங்கீதாவின் உணர்வுப் போராட்டத்தையும்.. விபத்திற்கு பின் அவர்கள் சந்தித்த அந்த நொடியினையும் கண்கள் கலங்க லீலா பிரசாத் நினைவுகூர்ந்தார்.

இந்நிலையில் சங்கீதா எம்.பி.ஏ. முடித்து, இராமானுஜம் ஐ.டி. வளாகத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய வேலை நேரம் மதியம் 2 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு முடியும் என்பதால், அவரின் பெற்றோருக்குத் தெரியாமல், காலை 9 மணிக்கே என் வீட்டுக்கு வருவதும், எனக்கு உதவியாக இருப்பதும், மதியம் 12 மணிக்கு கிளம்பி வேலைக்குச் செல்வதுமாக இருந்தார்.என்னைவிட்டு சங்கீதா விலக, நான், என் பெற்றோர், நண்பர்கள் என யார் சொன்னதையும் அவர் பெரிதாகவே எடுக்கவில்லை.

என்மீது அன்பை பொழிவது.. திருமணத்திற்கு முன்பே எனக்கான தனிப்பட்ட வேலைகளைச் செய்வது.. என் பெற்றோரைப்போல் என்னை அக்கறையாக கவனிப்பதென, எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் செயல்படத் தொடங்கினார். முடங்கிக் கிடந்த என் வாழ்க்கையில் சங்கீதாவின் வரவு புது ஒளி பாய்ச்ச.. வாழ்க்கை மீதும் ஆசை துளிர்த்தது. சங்கீதா எனக்கு பக்கபலமாக பெரும் துணையாக இருந்தார் என்றவர் திரும்பி தன் காதல் மனைவியைப் பார்க்க, அவரைத் தொடர்ந்து பேசினார் சங்கீதா.

படுத்த படுக்கையில் அவரைப் பார்த்ததுமே எனக்கு அழுகை பீரிட்டு வெளிப்பட்டது. நான் அவரைத் தேடி தினமும் அவர் வீட்டுக்கு வருவதை  அவர் பெற்றோர் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நீ உன் நேரத்தை வேஸ்ட் பண்ணாதம்மா. இவனை கவனிக்க ரொம்பவே பொறுமை வேணும். அதுக்கு நீ உன்னையே தியாகம் செய்யணும். இதெல்லாம் உனக்கு சரிப்படும்மா? நீயும் என் பொண்ணு மாதிரி. என் பொண்ணா இருந்தால் இந்த மாதிரி நிலையில் உள்ள பையனுக்கு கண்டிப்பாக நான் திருமணம் செய்யவே மாட்டேன்.

நீ ரொம்ப ரொம்ப யோசி’ எனவும் சொன்னார்கள். ‘அழிச்சுட்டு மறுபடியும் முதல்ல இருந்து கோடு போட முடியாது. இது வாழ்க்கை. தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காத’ என நண்பர்கள் சொன்னார்கள். அவரும் என்னைப் பற்றி நிறைய யோசித்தார். அவர் விசயத்தில் நான் பின்வாங்கவில்லை என தழுதழுத்தவர், நான் ஒன்றை மட்டும் அவரிடத்தில் உறுதி செய்தேன். ‘நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பரவாயில்லை. உன் வீட்ல சம்மதிக்கலைன்னாலும், தூக்கிட்டுப்போய் உன்னைக் கல்யாணம் பண்ணுவேன்’ என்றேன்.

திடீரென வாழ்க்கை மாறியதில் அவரிடம் கோபம் அதிகரித்திருந்தது. எல்லாவற்றுக்கும் கோபப்பட்டுக் கொண்டே இருந்தார். உலகமே இடிந்த மாதிரி இருந்தார். அவரின் உடல் ரிதியான கஷ்டங்கள் எனக்கும் புரிந்தது. இருந்தாலும் நான் அவருக்காக நின்றேன். ஆனாலும் அவர் என்னை திருமணம் செய்ய முன்வரவில்லை.

அதன் பிறகே போராடி வேலூர் ரிகாப்ளிசேஷன் சென்டருக்கு அவரை அனுப்பி வைத்தேன். சி.எம்.சி. மருத்துவமனையில் அனைத்து டெஸ்டுகளும் எடுத்ததில், அவர் திருமணம் செய்துகொள்ளலாம் என மருத்துவர்கள் சொல்ல, அதன் பிறகே அவர் மீது அவருக்கு நம்பிக்கை வந்தது. பிறகு தென்காசியில் உள்ள அமர்சேவா சங்கம் சென்றதில் ரொம்பவே அவரின் தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

அவரைத் தொடர்ந்த லீலா பிரசாத், சங்கீதா கொடுத்த நம்பிக்கையில் வேலூரில் தங்கி சில மாதங்கள் பிஸியோ தெரபி, ஆக்குபேஷனல் தெரபி பயிற்சிகளை எடுத்தேன். என்னைப்போல் பலரை அங்கு பார்த்ததில் வாழ்க்கையில் நம்பிக்கை வந்தது. பிறகு அமர்சேவா சங்கம் சென்று 8 மாதங்கள் அங்கேயே தங்கி பயிற்சி எடுத்ததில், பிறர் உதவியின்றி, தனியே செயல்படும் அளவு தேறினேன். அங்கிருந்து வெளியே வரும்போது, தன்னம்பிக்கை ரொம்பவே கூடியிருந்தது.  தனி ஆளாக நானே ரயிலேறி என் வீடு வந்து சேர்ந்தேன். என்னைப் பார்த்து சங்கீதாவும், என் பெற்றோரும், நண்பர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

தொடர்ந்து வீல்சேர் மாரத்தான், வீல்சேர் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ்.. வீல்சேர் ஃபேஷன் ஷோ என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று என்னை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கொண்டு வந்தேன். ஸ்பைனல் ஃபவுண்டேஷன் தொடர்புகளும் கிடைத்தது. மாற்றுத் திறனாளி நண்பர்கள் பலரும் நட்பு வட்டத்திற்குள் வந்தார்கள். எனக்கான வருமானத்தை ஆன்லைன் வேலைகளில் தேடிக் கொண்டேன்.

விபத்திற்குப் பிறகு, 2012ல் தொடங்கி 2020 வரை 8 ஆண்டுகள் எங்கள் காதல் இப்படித்தான் நகர்ந்தது. இந்த நிலையில், நான் எனக்கான மாடிஃபைட் டூ வீலர் ஒன்றை கடந்த வருடம் உருவாக்கினேன். வீல் சேரோடு வண்டியில் ஏறி அப்படியே டூ வீலரில் டிராவல் பண்ணுவோம். அதன் பிறகே நானும் அவளுமாக பீச், சினிமா, வெளி இடங்கள் என பயணிக்க ஆரம்பித்தோம். இந்நிலையில் சங்கீதா வீட்டிற்கு எங்கள் காதல் தெரியத் தொடங்கி பிரச்சனை உருவானது என்றவரை இடை மறித்த சங்கீதா...

நான் இவரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பதை கண்டிப்பாக என் வீட்டில் சொல்ல முடியாது. வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிக்க.. அதிரடியாய் முடிவெடுத்து பதிவு திருமணம் செய்து, என் வீட்டில் சொல்லாமலே அவர் வீட்டுக்கு நிரந்தரமாக வந்துவிட்டேன்.அதன் பிறகு எங்கள் திருமணம் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர் தினத்தில் அனைவர் முன்னிலையிலும் சிறப்பாக நடந்தது என இருவரும் கரம் பற்ற... ‘இணையே.. என் உயிர் துணையே...’ என்ற பாடல் காற்றிலே மிதந்து வர...“காதல் எதுவும் செய்யும்!”

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!