சென்னை, கோவை, நெல்லையை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் பெட்ரோல் பங்க் : விரைவில் திறக்கப்படுகிறது

மதுரை :  சென்னை, கோவை, நெல்லையை தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் பெட்ரோல் பங்க திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது என சிறை வட்டாரம் தெரிவித்துள்ளது.  மதுரை மத்திய சிறையில் 1300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் பேவர் பிளாக், மர வேலைகள், நர்சரி, கேண்டீன், தபால் கவர் தயாரிப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

 இவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த சிறைச்சாலை வாசலில் சிறப்பு அங்காடி நடத்தப்பட்டு வருகிறது.  கைதிகள் நடத்துவதற்காக பெட்ரோல் பங்க் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டு, பல மாதமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்ற திமுக அரசு இந்த திட்டத்திற்கு புத்துணர்வு கொடுத்து, பெட்ரோல் பங்க் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

 

இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மத்திய சிறையில், கைதிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புது புது தொழில்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. சிறைச்சாலை - ஆரப்பாளையம் சந்திப்பில் உள்ள டிஐஜி பங்களா அருகே பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது.

கைதிகள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. ஏற்கனவே கோவை, நெல்லை மற்றும் சென்னை புழலில் பெட்ரோல் பங்கை கைதிகள் பராமரித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், விரைவில் மதுரை மத்திய சிறையிலும் பெட்ரோல் பங்க் திறக்கப்படும்’ என்றார்.

Related Stories: