×

நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் முறைகேடு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 11-ம் தேதி விசாரணை

சென்னை: தமிழக முதல்வராக  எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையிலும் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறைதான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட சுமார் ரூ.4ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பு அளவிற்கு ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் லஞ்ச ஒழிப்புத்துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு என்பதால் பெரிய அளவில் எந்த விசாரணையும் நடைபெறாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு சிபிஐ விசாரணைக நடத்த  உத்தரவிட்டார். இந்த வழக்கில் யாரேனும் மேல்முறையீடு செய்தால் எங்களது தரப்பு கருத்தை கேட்ட வேண்டும் என திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும், எடப்பாடி பழனிசாமியும் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்  ,சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும்,வழக்கு குறித்து ஆர்எஸ்.பாரதி விளக்கமளிக்க வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது வரும் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Tags : CPI ,Edapadi Palanisami ,Supreme Court , Edappadi Palaniswami, CBI investigation, Supreme Court, tender malpractice in highway department,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு