×

திட்டக்குடி அருகே பயங்கரம் பள்ளி மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: சக மாணவர்கள் 4 பேர் அதிரடி கைது

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ஆவினங்குடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆவினங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி இவருடன் படிக்கும் மாணவனின் பிறந்தநாள்  கொண்டாட்டத்தில் மாணவியும் பங்கேற்றுள்ளார். அப்போது கேக் வெட்டிய மாணவனின் அருகில் சம்பந்தப்பட்ட மாணவி நின்றிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மாணவனுடன் நின்றிருந்த மற்ற மாணவர்களில் 3 பேர், அந்த மாணவிக்கு தெரியாமல் அவருடன் நிற்பது போன்று செல்போனில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். பின்னர் அந்த மாணவர்கள் 3 பேரும், அடிக்கடி மாணவியை தொடர்பு கொண்டு தங்களுடன் நீ நிற்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவதாகவும், உனது பெற்றோருக்கும் இந்த புகைப்படத்தை காண்பித்து விடுவதாகவும் கூறி மிரட்டி வந்துள்ளனர்.இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடக் கூடாது என்றால் நீ, நாங்கள் உள்ள இடத்துக்கு வந்து அந்த புகைப்படங்களை நீக்கி விட்டு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 1ம் தேதியன்று சம்பந்தப்பட்ட மாணவி, மாணவர்கள் இருந்த இடத்துக்கு சென்ற போது, அந்த மாணவர்கள் 3 பேரும் மாணவியை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை யாரிடமாவது கூறினால் தாங்கள் எடுத்து வைத்துள்ள வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மீண்டும் மிரட்டி வந்துள்ளனர். மாணவி நடந்த சம்பவத்தை அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார், இத்தகவலை மாவட்ட எஸ்பியிடம் தெரிவித்தனர். எஸ்.பி. சக்திகணேசன் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, அவர்கள் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். அப்போது, அந்த செல்போனில் சம்பந்தப்பட்ட மாணவியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த 3 மாணவர்களுடன் சேர்த்து, பிறந்தநாள் கொண்டாடிய மாணவனையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் நேரில் சென்று விசாரணை நடத்தி, 4 மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். மாணவ, மாணவிகள் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆவினங்குடி சுற்று வட்டார பகுதிகளில் இச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Payangaram ,Thitagakudy , School girl, gang rape, students arrested
× RELATED விழுப்புரம் அருகே பயங்கரம் இருளர்...