ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஆலோசனை இபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் புகுந்து தாக்குதல்: நாற்காலிகள் வீச்சு; கார் கண்ணாடி உடைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். நாற்காலிகள் வீசப்பட்டன. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.ராமநாதபுரத்தில், எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் பேசுகையில், ‘‘முடிவெடுப்பதில் ஓபிஎஸ் தயங்குகிறார். கட்சி வளர்ச்சிக்கு தீர்க்கமான முடிவெடுப்பதில் இபிஎஸ் சிறப்பாக செயல்படுகிறார். ஓபிஎஸ்சிடம் தலைமை பண்பில்லை...’’ என பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்ட அரங்கில் திடீரென புகுந்த சிலர், ‘‘ஓபிஎஸ் வாழ்க... இபிஎஸ் ஒழிக’’ என கோஷமிட்டவாறு நாற்காலிகளை தூக்கி மேடை மீது வீசினர். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் நாற்காலிகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. சிலர் மீதும் தாக்குதலும் நடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். இதில் இபிஎஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். மேலும், கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பின் கூட்டம் நடந்தது.

Related Stories: