×

5 முதல் 16 வயதுடைய மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி: கலை பண்பாட்டுத்துறை அறிவிப்பு

சென்னை: கலை பண்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு  ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு  ஓவிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  இதுகுறித்து, கலை பண்பாட்டுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு:   தமிழகத்தில் உலக ஓவிய தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கத்திலும், ஓவியப்பயிற்சி முகாம்கள், ஓவிய கலைக்காட்சிகளை நடத்த அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக மண்டல அளவில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு மண்டல கலை பண்பாட்டு மையங்கள் மூலம் ஜவகர் சிறுவர் மன்றங்களில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை - 03 வளாகத்தில் வரும் 16ம் தேதி நடைபெறும் ஓவியப்பயிற்சி முகாமில் பென்சில் ஓவியம், வாட்டர் கலர் பெயின்டிங், ஆயில் கலர் பெயின்டிங் மற்றும் அக்ரலிக் பெயின்டிங், பேப்ரிக் பெயின்டிங் மற்றும் கண்ணாடி ஓவியம் ஆகிய 5 ஓவிய கலைப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

ஒரு கலைப் பிரிவிற்கு 30  முதல் 60 மாணவ, மாணவியர் வீதம் 300 மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி முகாமில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை கலைப்பயிற்சி அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில், 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாணவர்கள் கலைப் படைப்புகளை உருவாக்கி 3 மணி முதல் 4 மணி வரை மாணவர்களின் கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, கலைக்காட்சி 4 மணிக்கு பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்படும். ஓவியப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணாக்கர்களுக்கு பயிற்சிக்கு தேவையான பொருட்களும், பங்கேற்புக்கான சான்றிதழும் வழங்கப்படும். இதில் பங்கேற்க ஜவகர் சிறுவர் மன்றத்தை 044 - 28192152 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Department of Arts and Culture , Art training for students aged 5 to 16: Department of Arts and Culture notification
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்: கலெக்டர் வழங்கினார்