உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 காலி இடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல் இன்று நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்களை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி, 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பை கடந்த மாதம் 20ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதில், உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவியிடங்களுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் கட்சி அடிப்படையில் அல்லாமல் தேர்தல்கள் நடக்கிறது. கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. வேட்புமனுக்கள் தாக்கல் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் ஜூன் 27ம் தேதிடன் முடிவடைந்தது. தொடர்ந்து, 28ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது.  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1022 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1041 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா, நுண் பார்வையாளர்கள், இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் மாவட்ட அளவில் கண்காணிக்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி மற்றும் துணையாள் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் கோவிட் 19 தடுப்பு தொடர்பான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட தேர்தல் அலுலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 279 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 12 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகளும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு எண் 36, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 10, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 15க்கும் தற்செயல் தேர்தல் இன்று நடக்கிறது. இதை தொடர்ந்து, பதிவான வாக்குகள் வரும் 12ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.

Related Stories: