காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

மதுராந்தகம் : சென்னையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சாலை மார்க்கமாக காரில் திருவண்ணாமலையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில்,  கலந்து கொள்வதற்காக, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார். அப்போது,  மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோயில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த பகுதிக்கு வந்தவுடன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து முதல்வர் கையசைத்தார். அங்கு கூடியிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர்  முதல்வர் வாழ்க, முதல்வர் வாழ்க என  கோஷம் எழுப்பினர். சாலையோரம் நின்றிருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

மேலும், அப்பகுதியில்  நின்றிருந்த பெண்களிடம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் ஆட்சி எப்படி உள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு பெண்கள் சிறப்பாக உள்ளது என பதிலளித்தனர். நீங்கள் எப்படி உள்ளீர்கள் என முதல்வர் கேட்டதற்கு, நாங்கள் நலமுடன் உள்ளோம் என பதிலளித்தனர். முதல்வர் பெண்களிடம் பேசியதால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, முதல்வர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியில்,  காஞ்சிபுரம் எம்பி செல்வம், முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி, மதுராந்தகம் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், நகர செயலாளர் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் கண்ணன், ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் சத்திய சாய், தம்பு, சிவக்குமார், குமார், சிற்றரசு, சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Related Stories: