கசவநல்லாத்தூரில் ரூ1.20 கோடியில் புதிய உயரழுத்த மின்மாற்றி: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கசவநல்லாத்தூரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த 10 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி மூலம் 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக விவசாய கிணறுகளின் மோட்டார், வீடுகளில் வீட்டு உபயோகப்பொருட்கள் பழுதாகும் நிலையேற்பட்டது. இதனால் தடையின்றி மின்விநியோகம் செய்யும் வகையில் உயர் அழுத்த மின்மாற்றி அமைக்க திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜிராஜேந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று கட்டாயம் புதிய மின்மாற்றி அமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதன் அடிப்படையில் எம்எல்ஏ தொடர்ந்து மின்வாரியத்திடம் வலியுறுத்தியதன்பேரில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கசவநல்லாத்தூரில் துணை மின்நிலையத்தில் புதிதாக உயர் அழுத்த 16 மெகாவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றி அமைக்கவும், இதற்காக ஒரு கோடியே 19 லட்சத்து 31  ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.  

அதன்பேரில் கசவநல்லாத்தூர் துணை மின் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருமழிசை கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், சீத்தாராமன், உதவி பொறியாளர்கள் எஸ்.ராஜேஸ்வரி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  எம்எல்ஏ  வி.ஜி.ராஜேந்திரன் உயர் அழுத்த  மின்மாற்றியை இயக்கி தொடங்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே.திராவிட பக்கன், ஒன்றிய செயலாளர்கள் கே.அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், ராம்குமார், ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், ஏ.எஸ்.மணி, முன்னாள் ஊராட்சித் தலைவர் வி.ராஜசேகர், ஆர்.மோகனசுந்தரம், கொப்பூர் டி.திலீப்குமார், தா.குமார், எல்லப்பன், வாசு, சேகர், கே.அரவிந்த் என்.வேதாச்சலம், தொமுச திட்ட துணை செயலாளர் சி.தயாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: