×

பெரியபாளையம், ஆர்.கே.பேட்டையில் அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா: திரளானபக்தர்கள் பங்கேற்பு

பெரியபாளையம்: பெரியபாளையம், ஆர்.கே.பேட்டையில் உள்ள அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோயில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2019ம் ஆண்டு கும்பாபிஷேக விழா ‌நடைபெற்றது. இதனையடுத்து திரவுபதி அம்மன் உற்சவருக்கு கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி கணபதி பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. இந்நிலையில், நேற்று 8ம் தேதி கொடியேற்றி அதிகாலை இரண்டாம் காலை யாகசாலை பூஜைகளான கோபூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூரணாஹூதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து 8.30 மணியளவில் கலச புறம்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் இருந்து புரோகிதர்கள் கொண்டுவரப்பட்ட கலசங்களை கோவில் சுற்றி மேல தாளங்கள் முழங்க வளம் வந்து பின்னர் திரவுபதி அம்மன் உற்சவருக்கு 9.30 மணியளவில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பின்னர் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா ராம முதலியார் மற்றும் கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தில் புராதன திரவுபதி அம்மன் ஆலயம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கி வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம் உள்பட 4 கால பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. திருக்கோயில் சுற்றி பெரும் திரளான பக்தர்கள் கூடியிருக்க திருக்கோயில் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து மூலவர் ஸ்ரீதர்மராஜா சமேத திரவுபதி தேவிக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு ஊர் கிராமணி மனோகரன் ஏற்பாட்டில் திரௌபதி அம்மன் கிராம வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags : Amman Temples ,Periyapalayam ,RK Pettai , Kumbabishekam ceremony at Amman Temples in Periyapalayam, RK Pettai: Large number of devotees participate
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...