ஒற்றை தலைமை விவகாரத்தில் மோதல் போக்கு விஸ்வரூபம் அதிமுகவை சுயநலத்துக்காக ஓபிஎஸ் அழிக்க பார்க்கிறார்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்

சென்னை: அதிமுகவை சுயநலத்துக்காக ஓபிஎஸ் அழிக்க பார்க்கிறார் என்று தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 40 பக்க மனுவில் ஓபிஎஸ் குறித்து சரமாரி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவை கைப்பற்றும் வகையில் 2 பேரும் தனித்தனியாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் வரும் 11ம் தேதி, பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வந்து பொது செயலாளர் ஆகி விடலாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார். இதனால், ஓபிஎஸ் குறித்த புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்க தொடங்கியுள்ளார். தற்போது ஓபிஎஸ் குறித்து எடப்பாடி தரப்பினர் 40 பக்கம் மனுவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளார்.

 அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார். தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களையும் துன்புறுத்தினார். அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களாகவே உள்ளன. முதலில் அவர் பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அது நடக்காமல் போகவே போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அதன்பிறகும் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.

 இவற்றில் பலன் கிடைக்கவில்லை. அதோடு கட்சி நலனுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை  தூண்டிவிட்டார். அவர்களை வைத்து பொதுக்குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார். இவை அனைத்துமே அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகும். இதற்காக அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம். அதிமுகவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அந்த 2 பதவிகளும் காலாவதியாகி விட்டது.

ஓ.பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடை பிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அதை அவர் பொதுக்குழு கூட்டத்தில் காட்டி இருக்க வேண்டும். அதற்கு மாறாக 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று கோர்ட்டில் போய் மனு கொடுத்தார். இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவருக்கு அவராகவே தடை விதித்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையை மறைத்து ஒருதலைபட்சமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி செயல், கட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது.

எனவே அதிமுக தொடர்பாக இனி அவரிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். அதுபோல அவருக்கு ஆதரவாக யார் மனு கொடுத்தாலும் அவர்களுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்து விட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இருந்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சி விதி 20ஏ (7) பிரிவின்படி நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் கட்சி வழி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு புகாரை ேதர்தல் ஆணையத்தில் கூறியிருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10ம் தேதியே சென்னை வர உத்தரவு

எடப்பாடி தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு சொகுசு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 10ம் தேதியே சென்னைக்கு வந்து விட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களை அழைத்து வருவதற்காக பொறுப்புகள் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் 10ம் தேதியே சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் கட்சியினர் தங்கும் வகையில் சென்னையில் ஓட்டல்கள் அதிக அளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

பொதுக்குழுவில் தடபுடல் விருந்து

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்களுக்கு ‘கியூஆர்’ கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.  

அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் தான் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் கட்சி ரீதியாக 75 மாவட்டங்கள் உள்ளது. 75 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மேஜை போடப்பட்டு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு மதியம் தடபுடல் சைவ உணவுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. வடை, பாயாசத்துடன் 24 வகையான உணவுகள் பரிமாறப்பட உள்ளது.

Related Stories: