×

418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்த திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் நாளை காலை தங்க கொடிமரம் பிரதிஷ்டை: திருவிழாவும் தொடங்குகிறது

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. சுமார் 418 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 29ம் தேதி முதல் தொடர்ந்து சிறப்பு யாகங்கள் நடந்து வருகின்றன. ஒன்பதாம் நாளான நேற்று  கோவிலில் பூஜைகள் நடந்தது.  மாலையில் திருவனந்தபுரம்  கோபிகா வர்மாவின்   மோகினியாட்டம் நடந்தது. 10ம் நாளான இன்று (8ந்தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மாலையில் மண்டல பூஜை, கொடிமர பூஜை ஆகியன நடந்தது.

11ம் நாளான நாளை (9ந்தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு  கொடிமர பிரதிஷ்டை நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு உச்ச பூஜை, அபிஷேகம், மதியம் அன்னதானம் ஆகியன நடக்கிறது.  மாலை 5 மணிகு ஸ்ரீபூதபலி, அத்தாழ பூஜை நடக்கிறது. கொடிமர  பிரதிஷ்டை செய்தால் திருவிழா எடுக்க வேண்டும் என்பது ஆகம விதிகளில் ஒன்று.  அதனால் நாளை மாலை புதியதாக அமைக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட  கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு ஆறு நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பள்ளிவேட்டை சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியில் 13ம்தேதி நடக்கிறது.

கேரள மாநிலம் பந்தனந்திட்டா மாவட்டம் கோன்னி வனப்பகுதியில் இருந்து கடந்த 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25.ந்தேதி 70 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேக்குமரம் டிரைலர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவில் மேற்குவாசல் பகுதியில் நிறுவப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு  200 கிலோ செம்பு பயன்படுத்தி, 42  கவசங்கள் உருவாக்கப்பட்டது. இந்த கவசங்கள் கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் உருவாக்கப்பட்டது. பின்னர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றரை கிலோ தங்க முலாம் பூசப்பட்டது. வெள்ளியில் செய்யப்பட்ட கருடாழ்வார் சிலை செயப்பட்டு அதன் மீது தங்கமுலாம் பூசப்பட்டது.

இப்போது அந்த கருடாழ்வார் சிலை கொடி மரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி கருடாழ்வார் சிலையும் சேர்த்து 72 அடி உயரம் கொண்டதாக இந்த கொடிமரம் உள்ளது. நாளை மாலை ஆறரை மணிக்கு மேல் கோவில் தீபாராதனையைத் தொடந்து கொடிமரத்தில் கருடன் இலச்சினை கொண்ட கொடி ஏற்றப்படுகிறது. வரும் 14 ம் தேதி வரை திருவிழா பூஜைகள், காலை மாலையில் ஸ்ரீபூதபலி எழுந்தருளல் நடக்கிறது. 14ந்தேதி காலை ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு ஆறாட்டு கோவிலின் கிழக்கு வாசல் பகுதியையொட்டி உள்ள பரளியாற்று கிழக்கே கடவில் நடைபெறும்.

Tags : Adhikesavapurumal Temple , Tiruvattar Adikesavaperumal temple, where Kumbabhishekam took place after 418 years, consecration of golden flag tomorrow morning: festival also begins
× RELATED ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோயிலில் தேர் திருவிழா