×

சமூக மாற்றத்திற்கு மண் சார்ந்த கலைகள் உதவும்: தூத்துக்குடி நெய்தல் கலை விழாவில் கனிமொழி எம்.பி., பெருமிதம்

தூத்துக்குடி: சமூக மாற்றத்திற்கு மண் சார்ந்த கலைகள் உதவுவதாக தூத்துக்குடி நெய்தல் கலைவிழாவில் கனிமொழி பெருமிதத்துடன் கூறினார். தூத்துக்குடி தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நெய்தல் கலைவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி எம்.பி.,யும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், எஸ்.பி., பாலாஜி சரவணன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் கனிமொழி எம்பி பேசியதாவது: நம்முடைய மண் சார்ந்த கலைகள் ஒரு பொக்கிஷம். நம் வாழ்க்கையை இந்த கலைகள், அதன் உள்ளே வடித்துக் கொள்கிறது.

மற்ற கலைகள் வெளியில் இருக்கக் கூடிய தேடல்களை, மதம் சார்ந்த, இறை உணர்வுகளை பிரதிபலிக்க கூடியவையாக உள்ளன. கிராமிய பாடல்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு செய்து உள்ளன. வெள்ளம், வறட்சி, வெளியூருக்கு வேலைக்கு செல்லுதல், சின்ன, சின்ன கனவுகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்யக்கூடியது நம் மண் சார்ந்த கலைகள்தான். அந்த கலைகளில் தான் நம் சமூகத்தை பார்த்த கேள்விகள் உள்ளன. சமூகத்தில் நாம் எதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, சமூகத்தின் மீது உள்ள விமர்சனங்கள், கேள்விகளை தொடர்ந்து முன்வைக்கும் விஷயமாக இந்த மண் சார்ந்த இசை, கலைகள் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கின்றன.

இந்த கலை வடிவங்கள் உயிர்ப்போடு இருக்கக்கூடிய கலை வடிவங்கள் ஆகும். நம்முடைய வாழ்க்கையோடு அதனுடைய பயணங்களும் உள்ளன. நம்முடைய வாழ்க்கை மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கான பாடல்களும் உள்ளன. இந்த கலை வடிவங்கள் உயிர்ப்போடு வாழ்க்கையை, சமூகத்தை, கேள்விகளை, நம் அரசியலை எடுத்து முன்வைக்க கூடியதாக இருக்க வேண்டும். இந்த கலைவடிவங்கள் அந்த வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றன. இதனை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டு இருந்தார்.

முதல்-அமைச்சரும் இந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். உணவும், கலைகளும் தான் நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும். இல்லையென்றால் அகழ்வாராய்ச்சி செய்துதான் எடுத்து வர வேண்டும். ஆனால் இந்த கலை வடிவங்கள் அதை நமக்கு பாதுகாத்து ஒவ்வொரு நாளும் தரக்கூடிய கலை வடிவங்கள். அதனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என்றார்,
விழாவில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நையாண்டி மேளம், காவடியாட்டம், பறையாட்டம், ஜிக்காட்டம், புலியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதே போன்று உணவுத்திருவிழா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன்(விளாத்திகுளம்), தமிழரசி(மானாமதுரை), துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின்,

பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், தெற்கு மாவட்ட தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன் தாஸ் சாமுவேல்,  மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகசேன், கனகராஜ்,

ஒட்டப்பிடாரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், சுப்பிரமணியன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மீனவரணி அமைப்பாளர் டேனி, மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, வக்கீலணி துணை அமைப்பாளர் பூங்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், கவுன்சிலர்கள் விஜயகுமார், கண்ணன்,

இசக்கிராஜா, கந்தசாமி, பவாணி மார்ஷல், எடின்டா, மெட்டில்டா, பச்சிராஜ், ஜான்சிராணி, ரெக்சின், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், ஸ்பிக் பிஆர்ஓ அமிர்தகௌரி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையாளர் சேகர், வட்டச்செயலாளர் சுப்பையா, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், பிரதிநிதி பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நன்றி கூறினார். மேலும் இந்த விழா வருகிற 10-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது.

Tags : Thuthukudi Waving Arts Festival ,Kanilingani ,P. , Soil-based arts can help social change: Kanimozhi MP, Perumitham at Tuticorin Weaving Art Festival
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...