×

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரில் மனம் குன்றிய சிறுவனின் வீட்டிற்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்து வரும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் இல்லத்திற்கு சென்று, அப்பயனாளிக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி, நலம் விசாரித்தார்.

சிவானந்தத்தின் தந்தை ஏழுமலை ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் தமிழரசி விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சிவானந்தம் உட்பட ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இப்பயனாளியின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அண்மையில் மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக ரூ.25,000/- கறவை மாடு வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
    
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் இல்லம் தோரும் மேற்கொண்ட கள ஆய்வின் போது, ஒன்றரை வயதில் சிவானந்தத்திற்கு மூளைமுடக்குவாதம் மற்றும் அறிவுசார் குறைபாடு கண்டறியப்பட்டு, தொடர்ந்து இயன்முறை பயிற்சி மற்றும் ஆரம்பகல்வி வழங்கப்பட்டது.

இப்பயனாளிக்கு ரூ.9,000 மதிப்புள்ள தசைப்பயிற்சி உபகரணங்கள் மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள சிறப்புக்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் வாயிலாக  இல்லத்திற்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் சிறப்புக்கல்வி வழங்கப்பட்டு, தற்போது இப்பயனாளிக்கு 10-ஆம் வகுப்புக்கான கல்விப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
    
இப்பயனாளிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதம்தோறும் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1500 கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு, தற்போது ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக உதவியாளருக்கான உதவித்தொகையும் ரூ.1000 இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. இத்துடன் ரூ.15000 மதிப்புள்ள மூளை முடக்குவாத சிறப்பு சக்கரநாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது.    
    
பள்ளிக்கல்வித் துறையின் வீட்டுவழிக் கல்வியில் மூளை முடக்குவாதம், அறிவுசார் இயலாமை, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள், மன இறுக்கம் போன்ற அதிக பராமரிப்பு தேவைப்படும் குறைபாடுகளை உடைய 10,146 குழந்தைகளுக்கு, அவர்களின் தேவைகளை கண்டறிந்து, பொருத்தமான உதவி உபகரணங்கள் மற்றும் உரிய இயன்முறை பயிற்சிகள் மட்டுமல்லாது உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இக்குழந்தைகளை கையாளும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.   

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ரூ.838.01 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தி வருகிறது. 2022-23ஆம் ஆண்டு உதவி உபகரணங்களுக்காக ரூ.51.18 கோடி ஒதுக்கப்பட்டு மூன்று சக்கரவண்டிகள், சக்கரநாற்காலிகள், பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஊன்றுகோல், உருப்பெருக்கி, காதொலிக்கருவி, மனவளர்ச்சி குன்றியோருக்கான மாற்றுவழியில் தொடர்புகொள்ளும் ஆவாஸ் மென்பொருளுடன் கூடிய கையடக்க கருவி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பயனாளிகள் விரும்பும் உபகரணங்களை தாமே தெரிவு செய்துகொள்ளும் திட்டத்தின்கீழ், 8436 பயனாளிகளுக்கு ரூ.16.77 கோடி செலவில் உபகரணங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. கு. பிச்சாண்டி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு.காகர்லா உஷா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மரு. ஆர். ஆனந்தகுமார், இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திரு.க.நந்தகுமார், இ.ஆ.ப., திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Kilpennathur, Tiruvannamalai , Chief Minister M.K.Stalin visited the home of a depressed boy in Kilpennathur, Tiruvannamalai and provided welfare assistance.
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து