மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி பினாமி நிறுவனங்களில்; 3-வது நாளாக சோதனை

கோவை: கோவையில் மாஜி அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனங்களில் தொடர்ந்து 3வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர். இவர் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். அவருக்கு பினாமியாகவும் உள்ளார். இவரது வடவள்ளி வீடு, பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு, நண்பர்கள் வீடு என 6 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை அவிநாசி ரோடு பீளமேட்டில் உள்ள சந்திர பிரகாஷின் கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். இவர் சந்திரசேகருக்கு நண்பர். மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு இன்னொரு பினாமி ஆவார். இங்கு நடைபெற்ற சோதனையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒப்பந்த பணிகள் மூலம் பெறப்பட்ட வருமானம், பல்வேறு நிறுவனங்கள் மூலமாக கிடைத்த வருமானம் மற்றும் வருமான வரித்துறைக்கு செலுத்திய வரி விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மாநகராட்சியில் அதிக ஒப்பந்த பணிகள் கேசிபி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக புகார் உள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று மதியம் புலியகுளம் பெரியார் நகரில் உள்ள ஆலயம் அறக்கட்டளை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அறக்கட்டளைக்கு முறையான கணக்கு இல்லாமல் பணம் வந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதேபோல் மருதமலை அடிவாரம் பகுதியில் உள்ள இன்ஜினியர் சந்திரசேகரின் தம்பி செந்தில் பிரபு என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ேசாதனை நடத்தினர். செந்தில் பிரபு கோவை மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக உள்ளார்.

இதற்கிடையே 3வது நாளாக இன்று கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனம், மற்றும் புலியகுளத்தில் உள்ள ஆலயம் அறக்கட்டளையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு ஆவணங்கள், வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை முடிவில் அனைத்து இடங்களிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பறிமுதல் பொருட்கள், ரொக்கம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: