பீகார் மாநில ரயிலில் அராஜகம்; ஏசி பெட்டியை ஆக்கிரமித்து போலீஸ் எஸ்ஐ அடாவடி.! தட்டிகேட்ட டிக்கெட் பரிசோதகருக்கு தர்மஅடி

பாட்னா: பீகாரில் சென்ற ரயிலின் ஏசி பெட்டியை ஆக்கிரமித்த போலீஸ் எஸ்ஐயை தட்டிக் கேட்ட டிக்கெட் பரிசோதகரை போலீசார் கும்பலாக சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பக்தியார்பூர் ரயில் நிலைய போலீஸ் எஸ்ஐ சுனில் குமார் சிங் என்பவர், பாட்னா ரயில் நிலையத்தில் இருந்து தனாபூர் - பகல்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் டிக்கெட் ஏதுமின்றி பயணம் செய்தார். குறிப்பிட்ட ரயில்நிலையம் வந்தவுடன், சுனில் குமார் சிங் அமர்ந்திருந்த சீட்டுக்கு உரிய பயணி ஒருவர் வந்தார். அவர், தனது இருக்கையை காலி செய்யும்படி சுனில் குமார் சிங்கிடம் கேட்டார். ஆனால், அவர் இருக்கையில் இருந்து எழுந்து செல்ல மறுத்துவிட்டார்.

அதிர்ச்சியடைந்த  பயணி, ரயில் டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) தினேஷ் குமார் சிங் என்பவரிடம் முறையிட்டார். அவர், சுனில் குமார் சிங்கிடம் வேறு இடத்தில் உட்காருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் டிடிஇக்கும், சுனில் குமார் சிங்குக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அந்த ரயில் பக்தியார்பூர் வந்தவுடன், சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் உள்ள தனது சக போலீஸ்காரர்களை சுனில் குமார் சிங் செல்போனில் அழைத்தார். அவர்கள் கும்பலாக ரயிலுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த டிடிஇ தினேஷ் குமார் சிங்கை சரமாரியாக தாக்கினர். கை கூப்பி கெஞ்சியும், தினேஷ் குமார் சிங்கை இரக்கமில்லாமல் அடித்துக் கொண்டே இருந்தனர். இந்த முழு சம்பவத்தையும் அங்கிருந்த பயணிகள் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இதுகுறித்து டிடிஇ தினேஷ் குமார் சிங் கூறுகையில், ‘ஏஎஸ்ஐயிடம் பலமுறை கெஞ்சினேன்; ஆனால் அவர் என்னை தொடர்ந்து தாக்கினார். அவரிடம் டிக்கெட்டும் இல்லை; சட்டவிரோதமாக இருக்கையை ஆக்கிரமித்திருந்தார். நான் சொல்வதை அவர் கொஞ்சமும் கேட்கவில்லை. எழுத்துப்பூர்வ புகாரையும் சமர்ப்பித்தேன். ஆனால் பக்தியார்பூர் போலீசார் எனது புகாரை வாங்க வில்லை. அதன்பின் மொகாமா ரயில் நிலைய போலீசிடம் புகார் அளித்தேன். அவர்களும் ஏற்கவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக மூத்த போலீஸ் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன். ஏஎஸ்ஐயை கைது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். இவ்விவகாரம் தொடர்பாக பாட்னா ரயில்வே எஸ்பி, குற்றம்சாட்டப்பட்ட எஸ்ஐ சுனில் குமார் சிங்குக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: