×

சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஆனைமலையில் படகுத்துறை அமைக்கப்படுமா? பொதுப்பணித்துறையை எதிர்பார்க்கும் பேரூராட்சி

ஆனைமலை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஒவ்வொரு ஆண்டும் கேரளாவுக்கு குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீரும் திறக்கப்படுகிறது. ஆழியார் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும், கேரளாவுக்கும் திறக்கப்படும் தண்ணீர் ஆழியாறு வழியாக செல்கிறது.
 அணையிலிருந்து ஆழியாற்றில் திறக்கும் தண்ணீரானது மயிலாடுதுறை, ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மணக்கடவு வழியாக கேரள பகுதிக்கு சென்றடைகிறது.

ஆனைமலையின் மையப்பகுதி வழியாக ஆழியாறு செல்வதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதை பார்த்து ரசிப்பதுடன், பெரும்பாலானோர் குளித்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மற்றும் டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகளில் பலர் இந்த ஆனைமலை ஆற்று பாலத்தை கடந்து கோட்டூர் வழியாக ஆழியார் மற்றும் வால்பாறை செல்கின்றனர்.

 இதனால், வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துசெல்லும் முக்கிய வழித்தடமாக ஆனைமலை உள்ளது. ஆனைமலைக்கு, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதால், ஆனைமலை பேரூராட்சிக்கு வருவாயை பெருக்கவும், பொருளாதார ரீதியான வளர்ச்சியை மேலும் பெருக்கவும், ஆனைமலை வழியாக செல்லும் ஆழியாற்றின் ஒரு பகுதியில் படகுத்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுமார் 7 ஆண்டுக்கு முன்புவரை ஆழியாற்றின் பெரும்பகுதியில் ஆகாயத்தாமரை படர்ந்திருந்ததால், கொசு உற்பத்தி மற்றும் தண்ணீர் மாசுபடும் அவலம் ஏற்பட்டது. ஆழியாற்றில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆழியாற்றில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

தற்போது, ஒரு சில இடங்களை தவிர பிற பகுதியில் ஆகாயத்தாமரைகள் இல்லாமல் தண்ணீர் ரம்மியமாக செல்கிறது. இந்த சூழ்நிலையில், ஆகாயத்தாமரை உள்ளிட்ட பிரச்னை எதுவும் இல்லாததால், சுற்றுலா பயணிகள் வசதிக்காக படகுத்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. சுமார் 10 ஆண்டுக்கு முன்பு ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கவுன்சிலர் கூட்டத்தின்போது, ஆழியாற்றில் படகுத்துறை அமைப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது சம்பந்தமாக பொதுப்பணித்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, சில மாதங்களிலேயே, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் ஆனைமலையாற்று பகுதியை ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை பொதுப்பணித்துறையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், படகுதுறை அமைப்பதற்கான நடவடிக்கை கிடப்பில் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, ஆனைமலை பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் எத்தனை சுற்றுலா பகுதிகள் இருந்தாலும், பொள்ளாச்சியை கடந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக விளங்குகிறது.  

சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமான, ஆழியாற்றில் படகுத்துறை அமைத்தால் பொருளாதார வளர்ச்சியில் ஆனைமலை இன்றும் சிறந்து விளங்குவதுடன், சிறந்த சுற்றுலா பகுதியாகும் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகமும் கிடையாது. அதற்கான முயற்சியை சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்’’ என்றனர். ஒவ்வொரு ஆண்டும், பண்டிகை காலங்கள் மட்டுமுன்றி, முக்கிய விஷேச நாட்களிலும், பள்ளி கோடை விடுமுறை என, ஆண்டில் பெரும்பாலான நாட்களிலும்  ஆனைமலை பகுதிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில், படகுத்துறை அமைப்பது அத்தியாவசிய ஒன்றாக அமைந்துள்ளது.

ஆனைமலை பகுதி தற்போது தாலுகாவாக மாறியுள்ளது. இதனால், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஆனைமலையில் படகுத்துறை அமைத்து படகு சவாரி அமைத்து, அதன் மூலம் பேரூராட்சிக்கு வருமானத்தை அதிகப்படுத்தி, பல்வேறு வளர்ச்சி பணிகளும் மேற் கொள்ள ஏதுவாக இருக்கும். இதற்காக, பொதுப்பணித்துறையிடம், ஆனைமலை வழியாக செல்லும் ஆழியாற்றில் படகு சவாரி குறித்து, மீண்டும் அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளோம், என பேரூராட்சி நிர்வாகத்தினர் சூசகமாக தெரிவித்தனர்.

Tags : Animalayan , Anaimalai : Coimbatore District Pollachi next to Aliyar Dam for Old Ayakatu and New Ayakatu Irrigation.
× RELATED ஆனைமலை பகுதியில் குறுகலான சாலை...