×

சின்னார் வழித்தடத்தில் நடுரோட்டில் குட்டியை ஈன்ற காட்டு யானை-போக்குவரத்து நிறுத்தம்

உடுமலை : உடுமலையில் இருந்து கேரளமாநிலம் செல்லும் மலைவழிப்பாதையில் நிறைமாத கர்ப்பிணியான காட்டு யானை ஒன்று நடுரோட்டில் குட்டியை ஈன்றது. இதையடுத்து அவ்வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மறையூர் அடுத்து அமைந்துள்ளது சின்னார் வனவிலங்கு சரணாலயம். இங்கு யானை,காட்டு மாடு, புலி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சின்னார் வனவிலங்கு சரணாலயமானது உடுமலையில் இருந்து மூணார் செல்லும் வழித்தடத்தில் உள்ளது. மலைவழிச்சாலையான இதன் வழியே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 5 மணி அளவில் ஆலம்பட்டி சம்பக்காட்டுக்கு இடையே  ஒரு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. சாலையை மறித்தபடி காட்டு யானை நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை அப்படியே நிறுத்தி விட்டு, யானை வனப்பகுதிக்கு செல்லும் வரை காத்திருப்பது என முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த கர்ப்பிணி யானை குட்டியை ஈன்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் வாகனங்களை இயக்க தடை விதித்தனர்.

ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் காலை 6.30 மணி அளவில் யானை தனது குட்டியை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அதுவரை சாலையின் இருபுறங்களிலும் வாகனஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனத்திற்குள் அமர்ந்தபடி யானையின் நடவடிக்கைகளை கண்டும், செல்போனில் படம் பிடித்தபடி இருந்தனர்.
கர்ப்பிணி யானை குட்டியை பிரசவித்து, அது வனப்பகுதிக்குள் பத்திரமாக செல்லும் வரை சின்னார் வனவிலங்கு சரணாலயத்தின் கரி முட்டியில் உள்ள  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Chinnar , Udumalai: A pregnant wild elephant in the middle of the road from Udumalai to Kerala state.
× RELATED இடியுடன் கனமழை