×

சிவகங்கை பூங்கா ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு 100 ஆண்டு யானைக்கால் மரத்தை பாதுகாக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் : தஞ்சை என்றால் அனைவரும் நினைவுக்கு வருவது பெரிய கோவில்தான். தஞ்சை மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் என்று அதிக எண்ணிக்கையில் தினமும் வந்து செல்கின்றனர். தஞ்சைக்கு சுற்றுலாவாக வரும் பயணிகள் பெரிய கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள சிவகங்கை பூங்காவையும் வந்து சுற்றி பார்த்துவிட்டுதான் செல்வார்கள். தஞ்சை சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871-ம் ஆண்டு நகராட்சியால் உருவாக்கப்பட்டது.

இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 10 ஏக்கரில் பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பசுமையான மரங்கள், புல்வெளி செடிகள், மான்கள், நரி, முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், பறவைகள், கிளிகள் வளர்க்கப்பட்டு வந்தது. சிறுவர்களுக்கான ரயில், படகு சவாரி, நீச்சல் குளம், நீர்சறுக்கு விளையாட்டுகளும் கொண்டு வரப்பட்டது.

இங்கு தினமும் வருபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம் பேர் என்றால் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை அப்படியே மூன்று மடங்காக உயர்ந்து விடும். இந்த பூங்கா ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏராளமாக மரங்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இவை இன்றும் நிழல் தந்து மக்களை மகிழ்வித்து வருகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க பொழுது போக்கு தலமாக விளங்கிய சிவகங்கை பூங்காவை மேலும் தரம் உயர்த்த ஏதுவாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் மூலம் பூங்கா முழுவதும் புதிய நடைபாதை, அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், ஸ்கேட்டிங் தளம், சேதமடைந்த இடங்களில் சுற்றுச்சுவர்கள் என சிவகங்கை பூங்காவில் பணிகள் நடந்து வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பதால் பூங்கா வளர்க்கப்பட்டு வந்த மான்கள் கோடியக்கரை சரணாலயத்திற்கும், நரிகள், கிளிகள், புனுகு பூனை போன்றவை வண்டலூர் மிருககாட்சி சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது சிவகங்கை பூங்காவில் சீரமைப்பு பணிகள் வெகு வேகமாக மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகத்திலேயே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்காவில் தஞ்சை சிவகங்கை பூங்காதான் மிகப்பெரியதும், பழமையானதுமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சிவகங்கை பூங்காவில் யானைக்கால் மரம் என்று 100 வயதை கடந்து இன்றும் கம்பீரமாக நிழல் தந்து கொண்டு இருக்கும் மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தை மேலும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி யானைக்கால் போன்று இருப்பதால் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரத்தை சுற்றி வேலி அமைத்து இதனை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். தன் கிளைகளை விரித்து பெரிய அளவிலான குடை போன்று இந்த மரம் காட்சி அளிக்கிறது. சிவகங்கை பூங்காவில் உள்ள இந்த பழமையான மரம் பல இயற்கை சீற்றங்களை தாண்டியும் இன்றும் வலிமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இதை உரிய வகையில் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Thanjavur : When everyone thinks of Tanjore, it is the big temple. Not only the people of Tanjore but also in the outer districts and states
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...