×

மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு வாழ்வில் உயர தயார்படுத்தி கொள்ள வேண்டும்-சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு

செங்கோட்டை : செங்கோட்டை எஸ்ஆர்எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து பள்ளி சட்ட கல்வி மன்றம், செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவியர்களுக்கான சட்டவிழிப்புணா்வு முகாம் நடந்தது. வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி சுனில்ராஜா தலைமை வகித்தார். தலைமையாசிரியை தமிழ்வாணி, செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷ்யாம்சுந்தர், வக்கீல் சங்கத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனா். தமிழாசிரியர் பிச்சையா வரவேற்றார். வக்கீல்கள் மகளிர்க்கான சட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினர். பெண்காவலர் தங்கமயில், காவலன் செயலி பயன், சேவைகள் குறித்து பேசினார்.

பின்னர் நீதிபதி சுனில்ராஜா பேசியதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மொத்தம் 6 அடிப்படை உரிமைகள் உள்ளது. அதேபோல் அடிப்படை கடமைகளும் உள்ளது. உரிமை, கடமை என இரண்டும் கொண்டதுதான் நமது வாழ்க்கை. உரிமை மறுக்கும்போதும், கடமையை செய்ய தவறும்போதும் பிரச்சனை உண்டாகிறது. மாணவிகள் கல்வி கற்பது மட்டுமே முதற்கடமை.  அதை திறம்பட கற்கவேண்டும்.

பெற்றோர், ஆசிரியர்களின் நல்லஅறிவுரைகளை கேட்டு வாழ்வில் உயர்ந்த இடத்திற்கும் உயர் பதவிகளுக்கும் வர தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். முகாமில் தாங்கள் அறிந்த சட்ட விழிப்புணர்வுகளை மற்றவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களது வாழ்வில் ஏற்பட்டுள்ள சட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண உதவவேண்டும். நீதிமன்ற அலுவலக வளாகத்தில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்திற்கு சென்று சட்டம் சார்ந்த, சாராத அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு தேடலாம்.

கணவரை இழந்த பெண்களுக்கு இழப்பீடு, விபத்து இழப்பீடு, குடும்ப அட்டை, மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க உதவி, நீண்ட கால வழக்குகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும். மேலும் பல சேவைகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு தேடிக்கொள்ளவும். 1098 என்ற இலவச தொலைபேசி சேவை மூலம் குழந்தை திருமணம் குறித்த தகவல்களை தெரிவித்தால் அந்த திருமணம் தடுக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். இந்த தகவல்களை மற்றவர்களுக்கு எடுத்து கூறவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Legal Awareness Camp , Red Fort : Red Fort SRM. School Legal Education Forum, Sengottai, located in the Government Girls Higher Secondary School campus
× RELATED சட்ட விழிப்புணர்வு முகாம்