×

தமிழகம், தெலங்கானா, ஆந்திராவில் கைவரிசை காட்டியது அம்பலம் தோஷம் நிவர்த்தி செய்வதாக தொழிலதிபரிடம் ₹37 லட்சம் மோசடி-ராஜஸ்தானை சேர்ந்த போலி சாமியார்கள் 7 பேர் கைது

திருமலை : சர்ப்பதோஷம் நிவர்த்தி செய்வதாக கூறி தொழிலதிபரிடம் ₹37 லட்சம் மோசடி செய்த ராஜஸ்தானை சேர்ந்த போலி சாமியார்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் தமிழகம், தெங்கானா, ஆந்திராவில் பலரிடம் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கட்கேசர் பகுதியை சேர்ந்தவர் கொண்டாரெட்டி, தொழிலதிபர். இவர் கடந்த 2020 டிசம்பர் மாதம் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது, வடமாநிலத்தை சேர்ந்த 2 சாமியார்கள் யாசகம் கேட்பது போல் வந்துள்ளனர். அவர்கள், கொண்டாரெட்டியின் கையில் இருந்த தழும்பை பார்த்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் சில மாதங்களுக்கு முன்பு ைபக்கில் சென்றபோது குறுக்கே பாம்பு வந்ததாகவும், அதன்மீது ஏற்றாமல் தவிர்க்க முயன்றபோது தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தின் தழும்பு எனக்கூறியுள்ளார்.

அதற்கு சாமியார்கள், ‘உங்களுக்கு சர்ப்பதோஷம் இருப்பதால்தான் இப்படி நடந்துள்ளது. இதற்கு பரிகார பூஜை செய்யலாம், பூஜை பொருள் வாங்குவதற்கு ₹41 ஆயிரம் தேவை’ என கூறியுள்ளனர். அதன்படி பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சாமியார்கள், சில நாட்களுக்கு பிறகு அவரது வீட்டுக்கு வந்து நள்ளிரவு பூஜை செய்தனர். மேலும் அடிக்கடி பூஜை, பரிகாரம், ஆன்மிக பயண செலவு எனக்கேட்டு மொத்தம் ₹37 லட்சத்தை மிரட்டி பெற்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த கொண்டாரெட்டி சில நாட்களுக்கு முன்பு ராச்சகொண்டா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கமிஷனர் மகேஷ் எம்.பகவத் தலைமையில் தீவிர விசாரணை நடந்து வந்தது. கடந்த 5ம் தேதி கொண்டாரெட்டியை மீண்டும் தொடர்புகொண்ட சாமியார்கள், மேலும் ஒரு பூஜை செய்யவேண்டும். இதற்காக எங்களுடன் சில சாமியார்களும் வருகின்றனர். எனவே பணத்தை தயாராக வைத்திருங்கள்’ எனக்கூறியுள்ளனர். போலீசாரின் ஆலோசனைப்படி கொண்டாரெட்டி, அவர்களை வரவழைத்தார்.

 நேற்றுமுன்தினம் கொண்டாரெட்டியின் வீட்டுக்கு 7 சாமியார்கள் வந்துள்ளனர். அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி நகர் மாவட்டத்தை சேர்ந்த  ராம்நாத், ஜோனாத், கோவிநாத், அர்ஜுன்நாத், புனரம், வஸ்னாராம், பிரகாஷ் ஜோதா ஆகிய 7 பேரும் போலி சாமியார்கள் என தெரியவந்தது. அவர்கள் 7 பேரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் 11 பேர் குழுவாக இணைந்து சாமியார் வேடமணிந்து தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர்.
குறிப்பாக தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இவர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த ₹8 லட்சம் பணம், ருத்ராட்ச மாலைகள், பணம் எண்ணும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கமிஷனர் மகேஷ் எம்.பகவத் கூறுகையில், தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சஞ்சுநாத், கோரக்நாத், பிரகாஷ் பிரஜாபதி மற்றும் ரமேஷ் பிரஜாபதி ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த போலி சாமியார் கும்பலில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட்டுகளும் தொடர்பில் உள்ளனர். போலி சாமியார்கள் தோஷ பூஜை நிவர்த்தி செய்வதாக கூறி பெறப்படும் பணத்தை இந்த ஹவாலா ஏஜென்ட்கள் மூலம் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

பூஜைகள் செய்வதாக கூறி வருபவர்களிடம் பொதுமக்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். முதல் முறை பணம் கொடுத்து ஏமாந்தபோதே உஷாராகி இருந்திருந்தால் ₹41 ஆயிரத்துடன் போலி சாமியார்கள் சிக்கி இருப்பார்கள். ஆனால் பல்வேறு கட்டத்தில் ₹37 லட்சம் வரை பணம் கொடுத்து இவர்கள் ஏமாந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்’ என்றார்.


Tags : Tamil Nadu ,Telangana ,Andhra ,Rajasthan ,Ambalam ,Dosha , Tirumala: 7 fake preachers from Rajasthan who defrauded a businessman of ₹37 lakh claiming to cure the snake plague
× RELATED தஞ்சாவூரில் காய்கறிகளின் விலை கிடு, கிடு உயர்வு