×

போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு- சிவகங்கை அருகே 3 பேர் கைது

சிவகங்கை : சிவகங்கை அருகே தோட்டத்தில் போலி மதுபான ஆலையை கண்டுபிடித்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் கடந்த ஏப்ரலில் போலி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் போலி மது பாட்டில்கள் சிவகங்கை பகுதியிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவகங்கை அருகே மதகுபட்டி சிவலிங்கபுரம் பகுதியில் போலி மதுபான ஆலை இயங்குவதும், இந்த ஆலையிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர் பாட்டில்கள் திருச்சி பகுதியில் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் தலைமையில் திருவெறும்பூர் போலீசார் நேற்று சிவகங்கை வந்தனர். அவர்கள் சிவகங்கை மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து மதகுபட்டி சிவலிங்கபுரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் சோதனை நடத்தினர். அங்கு ஒரு ஓட்டு வீட்டில் போலி மதுபான ஆலை செயல்பட்டதும், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் மற்றும் மதுபானம் தயாரிக்க தேவையான ஸ்பிரிட், காலி மது பாட்டில்கள், மூடிகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆலையில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (46), புதுச்சேரி கரிக்காலம்பாக்கம் பெருங்கையூரை சேர்ந்த ராம்குமார் (எ) ரெட்டி (59), தோட்டத்தின் உரிமையாளர் மதகுப்பட்டி சிவலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (42) ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், ‘‘6 மாதத்திற்கு முன்பு மாரிமுத்து, ராஜேந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார். அதை தொடர்ந்து மது ஆலை நடத்தலாம் என்று முடிவு செய்து ராஜேந்திரன் தோப்பில் மதுபானம் தயாரிக்க தேவையான இயந்திரங்கள், பாட்டில்களை வாங்கி வைத்திருந்துள்ளனர். பரிசோதனை முயற்சியாக ஒரு முறை மட்டும் மது தயாரித்து தயாரித்து திருச்சி மாவட்டத்தில் விற்றுள்ளனர்’’ என்றனர். மதுபான ஆலையில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த சிவகங்கை மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sivagangai , Sivagangai: Police found a fake brewery in a garden near Sivagangai and arrested 3 persons. Trichy District
× RELATED பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ