பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாட்னா : பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய தாம் வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமானதால் ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ், நேற்று முன்தினம் தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவும் காயமும் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறிது நேரத்தில் லாலுவுக்கு உடல்நலம் மோசமானதால் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள லாலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் லாலு பிரசாத்தின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்த அழுத்த மாறுபாடு, கூடுதல் சர்க்கரை பிரச்சனையால் லாலு அவதிப்பட்டு வருகிறார். மாட்டுத் தீவன ஊழல் உள்ளிட்ட 5 ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற லாலு, கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தற்போது ஜாமீனில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய தாம் வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தோள்பட்டை காயம் காரணமாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக தேஜஸ்வி யாதவ் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது,என்றார்.

Related Stories: