×

திருவொற்றியூர், மணலி, எர்ணாவூர் பகுதிகளில் காஸ் துர்நாற்றத்தால் தூக்கமின்றி குடியிருப்புவாசிகள் கடும் அவதி: அதிகாரிகள் ஆய்வுக்கு பின் நிம்மதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மணலி, எர்ணாவூர் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காஸ் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் தும்மல், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இரவில் தூங்க முடியாமல் கதவு, ஜன்னலை மூடும் நிலை உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர். திருவொற்றியூர் அருகே ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால் எங்கிருந்து காஸ் துர்நாற்றம் வருகிறது என்று தெரியவில்லை. இதுகுறித்து, பொதுமக்கள் மாநகராட்சி, மாசுகட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறை போன்றவைகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் காஸ் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்கிறது. இரவு நேரங்களில் குடும்பத்தினர் தூங்க முடியாததால் கதவு, ஜன்னலையும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மணலியில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான எம்எப்எல் உரத் தொழிற்சாலை மற்றும் எண்ணூரில் உள்ள தனியார் தனியார் உர தொழிற்சாலை ஆகியவற்றில் இருந்து அமோனியா வாயு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிப்படுகிறோம். தற்போது, பல நாட்களாக காஸ் துர்நாற்றம் வருவதால் எங்களால் சரியாக சுவாசிக்க முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சில சமயங்களில் கண் எரிச்சலும் ஏற்படுகிறது. இங்குசி.பி.சி.எல், டிபிஎல் மற்றும் மருந்து மூலப்பொருள் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து இதுபோன்ற துர்நாற்றம் வீசுகிறதா என்பதும் தெரியவில்லை.

எனவே மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக எந்த தொழிற்சாலையில் இருந்து காஸ் துர்நாற்றம் வருகிறது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் நேற்று மாலை பிற்பகல் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நிறுவனத்தில் காஸ் உற்பத்தி செய்யும் இடத்தில் கசிவு ஏற்பட்டதை கண்டு பிடித்து, பின்னர் நிறுவன அதிகாரிகள் அதை சரி செய்ததாக கூறப்படுகிறது.



Tags : Thiruvotiyur ,Manali ,Ernavur , Tiruvottiyur, Manali, Ernavur, Gas Odor, Residents
× RELATED சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக...