×

ஒரகடம் அருகே அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது சிமென்ட் கலவை லாரி மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி: 6 பேர் படுகாயம்

சென்னை: ஒரகடம் அருகே அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது சிமென்ட் கலவை ஏற்றி சென்ற லாரி மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் இருந்து சிமென்ட் கலவை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று மாலை வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியாக படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஒரகடம் அருகே வஞ்சுவாஞ்சேரி என்ற பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற பைக்கில் சென்றவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பைக் மீது மோதாமல் இருக்க லாரியை டிரைவர் திடீரென வலதுபுறம் திருப்ப முயற்சி செய்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த லாரி, படப்பையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு கார் அப்பளம் போல் நொறுங்கியது.

அதில் பயணம் செய்த இரண்டு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒன்றரை வயது பெண் குழந்தை மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தது. மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் சடலத்தை ஒரு மணி நேரம் போராடி மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காரில் வந்தவர்களின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். 


Tags : Oonadam , Oragadam, cement mixer truck, accident
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...