×

கும்பகோணம் அருகே வயல் திருவிழா திருவள்ளுவரின் உருவத்தை நடவு செய்து விவசாயி அசத்தல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே வயல் திருவிழாவில் திருவள்ளுவரின் உருவத்தை நடவு செய்து விவசாயி அசத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த மலையப்பநல்லூரில் நேற்று வயல் திருவிழா நடந்தது. இதில், உழவுக்கென்று திருக்குறளில் தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரின் உருவத்தை, இயற்கை விவசாயி இளங்கோவன் நாற்றுகள் மூலம் நடவு செய்துள்ளார். நேபாளத்தில் உள்ள சின்னார் என்ற நெல் ரகம், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்தால் 50 அடி நீளம், 45 அடி அகலத்தில் திருவள்ளுவரின் உருவ அமைப்பில் நடவு செய்துள்ளார்.

இதை அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வித்யா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதுகுறித்து விவசாயி இளங்கோவன் கூறுகையில், இயற்கை விவசாயத்தை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். 2,000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் 11 குறள்களில் இயற்கை விவசாயம் பற்றி எழுதியுள்ளார்.

அதன் தாக்கமாக இயற்கை விவசாயத்தை நாங்களும் செய்கிறோம் என்ற சந்தோஷத்தில் உள்ளேன். திருவள்ளுவரின் உருவத்தை வயலில் கடந்த 5 நாட்களாக நான் தனி ஆளாக செய்தேன். எனது அடுத்த முயற்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நடவு செய்ய உள்ளேன் என்றார்.



Tags : Thiruvalluvar ,Kumbakonam , Kumbakonam, the field festival, Thiruvalluvar image, the farmer is fantastic
× RELATED திருக்குறளில் வேள்வி!