×

குன்னூர் அருகே நள்ளிரவில் ரேஷன் கடையில் புகுந்து 20 லிட்டர் பாமாயில் குடித்த கரடி

குன்னூர்: குன்னூர் அருகே காந்திபுரம் பகுதியில் நள்ளிரவில் ரேஷன் கடைக்குள் புகுந்த கரடி 20 லிட்டர் பாக்கெட் பாமாயிலை குடித்து சென்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவை தேடி வரும் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீடுகளில் இரவு நேரங்களில் கரடி உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த நிலையில் குன்னூர் அருகே காந்திபுரம் பகுதி ரேஷன் கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்துள்ளது.  இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி பாமாயில்  குடித்தது. 2 அட்டை பெட்டிகளிலிருந்த 20 பாக்கெட் (20 லிட்டர்) பாமாயிலை குடித்தது. பின்னர் அங்கிருந்து வனப்பகுதியில் சென்று மறைந்தது. நேற்று காலை வழக்கம்போல கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது, கரடி பாமாயில் குடித்து சென்றதும், அரிசி மூட்டைகள் சிதறி கிடந்ததும் தெரிய வந்தது.

தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் கரடி ரேஷன் கடைக்குள் புகுந்து பாமாயில் குடித்தது தடயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் கரடி அப்பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


Tags : Coonoor , Coonoor, Ration Shop, Karadi
× RELATED குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது