×

அமலாக்கத் துறை சோதனையில் அம்பலம் விவோ ரூ.62,000 கோடி வரி ஏய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வரும் சீனாவை சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம், ரூ.62 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ,   அதன் சார்பு நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. அதில்,  இந்த நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு திருட்டுத்தனமாக அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த விவோ, அதில் 50 சதவீதத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பி இருக்கிறது. இதன்மூலமாக, இதுவரையில் ரூ.62,476 கோடிக்கு அது வரி ஏய்ப்பு செய்துள்ளது அம்பலமாகி உள்ளது. சோதனையின் போது விவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. 119 வங்கிக் கணக்குகளில் இருந்த இந்த ரூ.465 கோடி பணமும், ரூ.66 கோடிக்கான நிரந்தர வைப்புத்தொகையும், ரொக்கமாக ரூ.73 லட்சமும், 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் விவோ கம்பெனியும் பல ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், இது போன்ற மோசடியில்  அது ஈடுபட்டு இருப்பதால், அதன் புதிய செல்போன்கள் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

50% வருமானம் சத்தமின்றி சீனாவுக்கு கடத்தல் உன்னிப்பாக கவனிக்கிறதாம்
சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், ‘‘இந்தியாவில் விவோ நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதை சீன அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. வெளிநாடுகளில் வணிகம் செய்யும்போது அந்நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்படி எங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.  இந்திய புலனாய்வு அமைப்புகளும் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளும் என நம்புகிறோம். மேலும், இந்தியாவில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்களுக்கு எவ்வித பாரபட்சமின்றி வணிகம் செய்யும் சூழலை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Ampalam Vivo , Enforcement department check, vivo, tax evasion
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு