×

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வேலைக்கார கல்வி முறையில் இன்னும் அதிக மாற்றங்கள் தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வாரணாசி: ‘ஆங்கிலேயர் உருவாக்கிய வேலைக்கார கல்வி முறையில் இன்னும்  ஏராளமான மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அகில இந்திய கல்வி மாநாட்டை  பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி), வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஒன்றிய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடக்கும் இந்த 3 நாள் அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் மோடி  நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:  ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை இந்தியக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள் தங்களுடைய கீழே பணிபுரிவதற்கான வேலைக்காரர்களை உருவாக்கும் விதமாகதான் கல்வி முறையை உருவாக்கினார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இருந்தாலும், ஏராளமானவை பழைய முறையில்தான் இருக்கின்றன. தேசிய கல்விக் கொள்கை தற்போது தாய்மொழியில் படிக்க வழி வகுத்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை இதுவரை இல்லாத பல சாத்தியக்கூறுகளை உணர்ந்து கொள்வதற்கான ஒரு கருவியை நமக்கு அளித்துள்ளது. நாம் அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

நமது இளைஞர்கள் திறமையானவர்களாகவும், நம்பிக்கையுடனும், நடைமுறைச் செயல்திறனுடனும் இருக்க வேண்டும். கல்விக் கொள்கை இதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. இளைஞர்களை பட்டப்படிப்புகளுக்குத் தயார்படுத்துவது மட்டுமன்றி, நாடு முன்னோக்கிச் செல்வதற்கு எந்த மனித வளம் தேவையோ, அதற்கேற்ப நமது கல்விமுறையையும் கொடுக்க வேண்டும். நமது ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் இந்தத் தீர்மானத்திற்குத் தலைமை ஏற்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க, புதிய அமைப்புகள் மற்றும் நவீன செயல்முறைகள் மிகவும் முக்கியம். கடந்த காலத்தில் கற்பனை கூட செய்யாதது இப்போது நிஜமாகி வருகிறது. புதிய கொள்கையானது குழந்தைகளின் திறமைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களை திறமையானவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

பாலின அடிப்படையில் நிதி ஒதுக்கீடு
நிதி ஆயோக்கின் ஒன்றிய அரசின்  திட்டங்கள் கண்காணிப்பு மற்றும் மறு  மதிப்பீட்டு  ஆய்வு அலுவலகம் அளித்துள்ள அறிக்கையில், ‘பெண்களுக்கான தேசிய  கொள்கையை வகுக்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களில்  பாலின அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும். பாலின அடிப்படையில், நிதி  ஒதுக்கும் நடைமுறை எந்த மாநிலத்திலும், எந்த ஒரு திட்டங்களிலும்  செயல்படுத்துவது இல்லை. பெண்கள், குழந்தைகள்  மேம்பாடு, பாதுகாப்பு மற்றும்  நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க மாநில அரசுகளை ஒன்றிய  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஊக்குவிக்க வேண்டும்,’  என்று கூறப்பட்டுள்ளது.

Tags : PM Modi , Britishers, servant education system, Prime Minister Modi,
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!