×

தலைமை கழகத்தை கைப்பற்றுவேன் என சசிகலா பேச்சு எதிரொலி அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமானோர் குவிப்பு: குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவேன் என்று சசிகலா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு குத்தாட்டம் போடும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததையடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி பொது செயலாளராக எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் கூடும் பொதுக்குழு செல்லாது என்று எடப்பாடி கூறி வருகிறார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். அதே நேரத்தில் நாளுக்கு நாள் இபிஎஸ் கை ஓங்கி வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பிரச்னை எழுந்துள்ள நிலையில் போட்டிக்கு சசிகலாவும் நான் தான் அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர் என்று கூற தொடங்கியுள்ளார். அதிமுக என்பது ஒரு தனிநபரின் வீடோ அல்லது தனியார் அமைப்போ அல்ல. 11ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி செல்லாது. நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர்.

எனவே அடுத்தக்கட்டமாக அதிமுக தொண்டர்களை திரட்டி தலைமை கழகத்துக்கு செல்வேன். நான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் என சசிகலா கூறியிருந்தார்.  சசிகலாவின் இந்த அறிவிப்பு எடப்பாடி, ஓபிஎஸ் அணியிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தலைமை கழகத்துக்கு வந்தால் பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுக்கும். இதை உணர்ந்து, அதிமுக தலைமை கழகத்துக்கு எடப்பாடி தரப்பில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமானோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் திரையில் படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதனை அவர்கள் பார்த்து தலைமை கழகத்தை காவல் காத்து வருகின்றனர். பணியில் ஈடுபட்டவர்களில் பெண் ஒருவர் ஆட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பாட்டுக்கு ஏற்றார் போல் அந்த பெண் ஆட்டம் போடுவது அதில் வருகிறது. அதனை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ரசிப்பது போல அந்த காட்சி இடம் பெற்றுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் என்பது ஒவ்வொரு அதிமுகவினருக்கும் கோயில் போன்ற இடம். ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் எந்தவிமான நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது இல்லை. வெளியில் தான் இதுவரை நடத்தப்பட்டு வந்தது. அப்படியிருக்கும் போது அதிமுக தலைமை அலுவலகத்திலேயே குத்தாட்டம் போடுவது எந்தவிதத்தில் நியாயம் என்று அதிமுகவின் உண்மை தொண்டர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குத்தாட்ட வீடியோ தற்போது பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

Tags : Sasikala ,AIADMK , Sasikala's statement that she will take over the leadership echoes the AIADMK office, a large number of people gather for security: the video of her punching creates a stir.
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா